ஆற்காடு அருகே கார் மீது தனியார் பஸ் மோதல் திமுக வேட்பாளர் உள்பட 6 பேர் படுகாயம்

ஆற்காடு, ஏப்.24: ஆற்காடு அருகே கார் மீது தனியார் பஸ் மோதியதில் திமுக வேட்பாளர் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம், திருப்பரக்குன்றம் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இங்கு தேர்தல் பணியாற்றுதவதற்காக ேவலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆர்.காந்தி எம்எல்ஏ தலைமையில், ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், தற்போது நடந்து முடிந்த சோளிங்கர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளரும், மாவட்ட அவை தலைவருமான அசோகன், மாவட்ட துணை செயலாளர் ஏ.கே.சுந்தரமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் 5 கார்களில் நேற்று காலை அரவகுறிச்சிக்கு புறப்பட்டனர்.

ஆற்காடு அடுத்த வேப்பூர் பைபாஸ் சாலை சந்திப்பில் சென்றபோது அசோகன் சென்ற கார் மீது, வேலூரில் இருந்து ஆற்காடு சென்ற தனியார் பஸ் மோதியது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. காரில் இருந்த அசோகன், எம்எல்ஏ ஆர்.காந்தியின் உதவியாளர் வடிவேல், திமுக நிர்வாகிகள் சிவா, ஆகாஷ், பாலாஜி, கார் டிரைவர் ஆனந்தன் ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த எம்எல்ஏக்கள் ஆர்.காந்தி, ஜெ.எல்.ஈஸ்வரப்பன் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று படுகாயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர். இதுகுறித்து, தகவலறிந்த ஆற்காடு டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜி வழக்குப்பதிந்து முப்பதுவெட்டியை சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் ஹேமநாதனை(32) கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: