சென்னை கடற்கரை- செங்கல்பட்டு-அரக்கோணம் இடையே நாட்டிலேயே நீண்ட தூர வட்ட ரயில் பாதை திட்டம் செயல்பாட்டிற்கு வந்தது இரண்டு மின்சார ரயில்கள் இயக்கம்

அரக்கோணம், ஏப்.24: சென்னை கடற்கரை- செங்கல்பட்டு- காஞ்சிபுரம்- அரக்கோணம்- சென்னை கடற்கரை இடையே இருதிசைகளிலும் தலா ஒரு மின்சார ரயில் என 2 ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டு நேற்று முதல் ரயில் சேவை தொடங்கியது.

அரக்கோணம் - செங்கல்பட்டு இடையே கடந்த 2000ம் ஆண்டு வரை, மீட்டர்கேஜ் பாதையில் ரயில்கள் இயக்கப்பட்டன. 2003ம் ஆண்டில் அகலப்பாதையாக மாற்றி, அரக்கோணம்- செங்கல்பட்டு வரை 63 கி.மீ. தூரம் ரயில் பாதையில், முதல் கட்டமாக செங்கல்பட்டில் இருந்து தக்கோலம் வரை 56.5 கி.மீ தூரம் மின்மயமாக்கும் பணிகள் நடந்தது. மேலும், அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தின் எதிரே உயர் மின்அழுத்த கம்பிகள் செல்வதால், விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பயிற்சியில் ஈடுபடும்போது, உரசி விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது எனக்கருதி மீதமுள்ள 6.5 கி.மீ. தூரம் ரயில் பாதையை மின்மயமாக்கும் பணிகள் நிறுத்தப்பட்டன. இதையடுத்து தக்கோலம் அடுத்த கல்லாறு தொடங்கி பொய்ப்பாக்கம், மேல்பாக்கம் வழியாக அரக்கோணம் சந்திப்புக்கு 9.8 கி.மீ தூரத்துக்கு மாற்றுவழி ஏற்படுத்தப்பட்டு, புதிதாக மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதை ₹54 கோடியில் அமைக்கப்பட்டது.

இதன் மூலம் நாட்டிலேயே மிக நீண்ட 194 கி.மீ. தூரம் கொண்ட சுற்றுவட்ட ரயில் பாதையாக மாற்றப்பட்டது. இந்நிலையில் கடந்த 15ம் தேதி செங்கல்பட்டு பாசஞ்சர் ரயில் இயக்கப்பட்டது. புதுச்சேரி ரயிலும் மேல்பாக்கம் வழியாக இயக்கப்பட்டது.

தற்போது இப்பாதையின் வழியாக புறநகர் மின்சார ரயில்கள் இயக்குவதற்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்தது. அதன்படி பயணிகளின் நீண்டநாள் கனவான வட்ட ரயில் பாதை திட்டம் நேற்று நடைமுறைக்கு வந்தது. அதன்படி, அரக்கோணம் ரயில் நிலையம் வந்த புறநகர் மின்சார ரயிலை பயணிகள் சங்கத்தினர் வரவேற்று பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். மேலும், சென்னை கடற்கரையில் இருந்து நேற்று காலை 9.50 மணிக்கு மின்சார ரயில் புறப்பட்டு தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் வழியாக அரக்கோணத்திற்கு மதியம் 2.20 மணிக்கு வந்தது. பின்னர் அங்கிருந்து திருவள்ளூர், ராயபுரம் வழியாக மாலை 4.15 மணிக்கு சென்னை கடற்கரைக்கு சென்றது. அதேபோல், சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30 மணிக்கு மின்சார ரயில் புறப்பட்டு, திருவள்ளூர் வழியாக அரக்கோணத்திற்கு மதியம் 1.10 மணிக்கு வந்தது. தொடர்ந்து அங்கிருந்து இருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக சென்னை கடற்கரைக்கு மாலை 4.10 மணிக்கு சென்றது.

Related Stories: