×

வானிலை முன்னறிவிப்புகளை எளிதில் தெரிந்துகொள்ள தமிழில் உழவன் செயலி விவசாயிகள் கோரிக்கை

திருவள்ளூர், ஏப்.24: வேளாண்துறையின் ‘உழவன்’ செயலியில், வானிலை முன்னறிவிப்புகளை தமிழில் வெளியிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மத்திய, மாநில வேளாண்துறைகள் சார்பில், விவசாயிகளுக்கு பயன்படும் வகையில், கடந்தாண்டு, ‘உழவன்’ என்ற மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. வேளாண்துறை மானியத்திட்டங்கள், பயனாளி திட்ட முன்பதிவு, பயிர்காப்பீடு, உரம் மற்றும் விதை இருப்பு, வானிலை உட்பட 9 வகையான சேவைகளை விவசாயிகள் இந்த செயலியில் பெற முடியும்.இதில், மாநில அளவில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு, இந்த மொபைல் செயலிக்கு அதிக வரவேற்பு இருந்தது. குறிப்பாக, மாவட்டத்துக்கான வானிலை முன்னறிவிப்பு, கோவை வேளாண் பல்கலை கழகத்திடம் பெறப்பட்டு, இந்த செயலியில் பதிவேற்றம் செய்யப்படும்.

கடந்த சில வாரங்களாக, இந்த அறிவிப்பு ஆங்கிலத்தில் பதிவேற்றப்படுகிறது. முன்பு, ஒரு வாரத்துக்கான வானிலை முன்னறிவிப்பும், அதையொட்டி, விவசாய சாகுபடியில், பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களும் தமிழில் பதிவிடப்படும். தற்போது, ஆங்கிலத்தில் இந்த அறிவிப்பு வெளியாவதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், விவசாய தொழில்நுட்பங்களை பின்பற்றுவதில், திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் எப்போதும் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். அவ்வாறே, வேளாண்துறையின் உழவன் செயலிக்கும் வரவேற்பு கிடைத்தது.ஆனால், வேளாண் பல்கலை கழகம் அறிவிப்புகள் ஆங்கிலத்தில் வெளியிடப்படுவதால், வழிகாட்டுதல்களை பின்பற்ற முடிவதில்லை. அதிக காற்று உட்பட வானிலை மாற்றங்களால், சாகுபடிகள் பாதிக்கப்படுகிறது. எனவே, முன்னறிவிப்புகளை மீண்டும் தமிழில் வெளியிட வேண்டும் என்றனர்.


Tags :
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...