கச்சபேஸ்வரர் கோயில் வெள்ளித் தேரோட்டம்

காஞ்சிபுரம், ஏப்.24: காஞ்சி
புரம் அருள்மிகு கச்சபேஸ்வரர் கோயில் வெள்ளித்தேரோட்டம் நேற்று முன்தினம் இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது.காஞ்சிபுரத்தில் உள்ள சைவ சமய திருத்தலங்களில் பிரசித்திபெற்றது கச்சபேஸ்வரர் கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை மாத பிரம்மோற்சவம் நடைபெறும். அதன்படி கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கியது.அதை தொடர்ந்து அருள்மிகு சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக வந்து அருள்பாலித்தார்.
இதையொட்டி, தினமும் காலை, மாலை வேளைகளில் சூரியப்பிரபை, சந்திரப்பிரபை, பூத வாகனம், திருக்கயிலைக் காட்சி, நாக வாகனம், இடப வாகனம், அதிகார நந்தி சேவை, சப்பரம், யானை வாகனம், உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.மேலும், விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் இரவு வெள்ளி ரதத்தில் சுந்தராம்பிகை சமேத கச்சபேஸ்வரர் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை முன்னிட்டு வாண வேடிக்கைகள் உள்பட சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதனைத் தொடரந்து பஞ்சமூர்த்திகள் உற்சவம், சந்திரசேகரர் தீர்த்தவாரி, தங்க இடப வாகனம் என சிறப்பு வாகனங்களில் தொடர்ந்து எழுந்தருளி அருள்பாலிப்பார். இறுதியாக 108 சங்காபிஷேகத்துடன் வரும் 26ம் தேதி, கச்சபேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம் முடிவடையும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் குமரன் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.

× RELATED தீபத்திருவிழா 6ம் நாள் உற்சவம் : 111வது ஆண்டு வெள்ளித் தேரோட்டம்