காட்டாங்கொளத்தூர் பஸ் நிலையம் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் அபாயம்

செங்கல்பட்டு, ஏப்.24: காட்டாங்கொளத்தூர் பஸ் நிலையம் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.காட்டாங்கொளத்தூர் பஸ் நிலையம் அருகே சுமார் 2 ஏக்கர் பரபரப்பளவில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் மறைமலைநகர் நகராட்சிக்கு, குடிநீர் வழங்குவதற்காக, கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ராட்சத குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டது.தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பல லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. இதனால், முழுவதும் சிதிலமடைந்து, இடிந்து விழும் நிலையில் காட்சியளிக்கிறது. மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி பாழடைந்துள்ளதால், தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டது.எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த மேல் நிலை தொட்டியை, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் இடித்து அப்புறப்படுத்த வேண்டும். அந்த இடத்தில் நகராட்சி சார்பில் புதிய குடிநீர் மேல்நிலை நீர்ேதக்க தொட்டி அமைத்து, காட்டாங்கொளத்தூர் பகுதி மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்ய ேவண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, சென்ைன பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் மறைமலைநகர் சாட்டிலைட் சிட்டி அமைப்பதற்காக கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கூடலூர், நின்னகரை, களிவந்தபட்டு, கீழக்கரணை, செங்குன்றம், காட்டாங்கொளத்தூர், மட்டான் ஓடை, திருக்கச்சூர் ஆகிய பகுதிகளில் இருந்த அரசு நிலம் மற்றும் பொதுமக்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களை கையகப்படுத்தினர். அங்கு, சாட்டிலைட் சிட்டி அமைக்கப்பட்டு மறைமலைநகர் என்று பெயர் வைத்தனர். அதன்பின், ஆயிரக்கணக்கானோர் இங்கு குடிபெயர்ந்தனர்.பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள், இதுவரை பயன்படுத்தப்படாமல் அப்படியே உள்ளது. அதன் ஒரு பகுதியில் காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே இந்த ராட்சத குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. பொதுமக்களுக்கு செயல்படாமலும், அரசுக்கும் வீண் செலவாகவும் இந்த தொட்டி கட்டப்பட்டுள்ளது.இந்த தொட்டியை கட்டி முடிந்த பிறகு பாலாற்று குடிநீரை, இதில் ஏற்றப்பட்டது. பல்வேறு இடத்தில் கான்கிரீட் சரியாக போடாமல் விட்டதால், தொட்டியில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு நீர் கசிந்தது. அதிகாரிகள் பலமுறை சரிசெய்தும் அதை தடுக்க முடியவில்லை. இந்த திட்டத்தால், பணம் மட்டும் வீணாக செலவானது. இதனால் இந்த திட்டத்தை அதிகாரிகள் கைவிட்டனர்.அன்று முதல் இன்று வரை, மேற்கண்ட மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி, எந்த நேரத்தில் இடிந்து விழுமோ என்ற அச்சத்துடன் அப்பகுதி குடியிருப்புவாசிகள் உள்ளனர். தேவையான இடங்களில் அரசுக்கும், பொதுமக்களுக்கும் நலன் பயக்கும் வகையில் இந்த திட்டத்தை நிறைவேற்றவேண்டும். கையகப்படுத்தி உபயோகமில்லாத விவசாய நிலத்தை விவசாயிகளிடமே திருப்பி தரவேண்டும் என்றனர்.

× RELATED திருத்தங்கல்லில் ஊருக்கு...