நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தனியார் கல்லூரி தத்தெடுப்பு...தூய்மை படுத்தி மரக்கன்று நடும் பணி தீவிரம்

கூடுவாஞ்சேரி, ஏப். 24: நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, தனியார் கல்லூரி நிர்வாகத்தினர் தத்தெடுத்தனர். இதைதொடாந்து, பூமி தினத்தை முன்னிட்டு சுகாதார நிலைய வளாகத்தை தூய்மைபடுத்தி, மரக்கன்று நடும் பணி தீவிரமாக நடக்கிறது.
கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையோரத்தில் மேம்படுத்தப்பட்ட நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு 30 படுக்கை அறை,  உள்நோயாளிகள் பகுதி, வெளி நோயாளிகள் பகுதி, ஆய்வு கூடம், பிரசவ வார்டு, அறுவை சிகிச்சை வார்டு, குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை வார்டு, ரத்த சேமிப்பு நிலையம், ஸ்கேன், எக்ஸ்ரே, ஈசிஜி, பெண்கள் மார்பக புற்றுநோய் பகுதி, காசநோய் பகுதி, பல் மருத்துவம் மற்றும் சித்த மருத்துவம் உள்பட பல்வேறு வசதிகள் உள்ளன.நந்திவரம், கூடுவாஞ்சேரி, வல்லாஞ்சேரி, தைலாவரம், வள்ளலார்நகர், மாடம்பாக்கம், ஆதனூர், ஊரப்பாக்கம், ஐயஞ்சேரி, கிளாம்பாக்கம், காரணைப்புதுச்சேரி, காட்டூர், அருங்கால், கீரப்பாக்கம், முருகமங்கலம், பெருமாட்டுநல்லூர், கன்னிவாக்கம், தர்காஸ், அண்ணாநகர், பாண்டூர், காயரம்பேடு, மூலக்கழனி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த கர்ப்பிணி பெண்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் பயனடைகின்றனர்.

இந்நிலையில், நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, தனியார் கல்லூரி நிர்வாகத்தினர் தத்தெடுத்தனர். இதைதொடர்ந்து, பூமி தினத்தை முன்னிட்டு சுகாதார நிலைய வளாகத்தை தூய்மைபடுத்தி, மரக்கன்று நடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர்கள் ஆனந்த், சதீஷ், பீஷ்மர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சபாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக வள்ளியம்மை பொறியியல் கல்லூரி ஒருங்கிணைப்பாளர்கள் விவேகானந்தன், ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டு பூமி தினத்தை முன்னிட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தத்தெடுத்தனர்.  பின்னர் சுகாதார நிலைய வளாகத்தை சுற்றி தூய்மை படுத்தும் பணி மற்றும் மரக்கன்றுகள் நடும் பணிகளை தொடங்கி வைத்தனர். இதில் 20க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று மேற்கண்ட பணிகளை தொடர்ந்து செய்கின்றனர்.


× RELATED கலெக்டர் அலுவலகத்தில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு