×

சீரமைக்கப்படாத மலையாங்குளம் ஏரியில் தூர் வாரி மராமத்து பணி செய்ய பல லட்சம் நிதி?

உத்திரமேரூர், ஏப்.24: சீரமைக்கப்படாத மலையாங்குளம் ஏரியில், தூரிவாரி மராமத்து பணி செய்ய பல லட்சம் ஒதுக்கியதாக, மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இதை அறிந்த விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.உத்திரமேரூர் அடுத்த மலையாங்குளம் கிராமத்தில் சுமார் 700 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியில் இருந்து 2 மதகுகள் மூலம் உபரிநீர் வெளியேற்றப்படும். இதுபோல், வெளியேறும் உபரிநீரை கொண்டு, சுமார் 900 ஏக்கர் நிலத்தில் விவசாயிகள் பயிரிடுவர்.மேலும், இந்த உபரிநீரை கொண்டு கிராமப்புற விவசாயிகள் நெல், வேர்க்கடலை, கரும்பு, உளுந்து உள்ளிட்டவைகள் முப்போகம் பயிரிடுவர். கிராமப்புறக் கால்நடைகள் மற்றும் கிராமத்தின் மிக முக்கிய நீராதாரமாக விளங்குவது இந்த ஏரியாகும்.
இந்த ஏரியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரப்பட்டது. அதன் பின் தூர் வாராமலும், கால்வாய்கள் மற்றும் மதகுகள் சீரமைக்கப்படாமலும் கரைகள் பலப்படுத்தப்படாமலும் இருந்தன. இதனால் ஏரி தூர்ந்து போய் மதகுகள் வலுவிழந்தன.
இதைதொடர்ந்து, கடந்த 2015ம் ஆண்டு பெய்த கனமழையில், மலையாங்குளம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், ஏரி முழு கொள்ளளவை எட்டியதும், வலுவிழந்த மதகுகள் திடீரென உடைந்தது.
இதில் பயிரிட்டிருந்த விவசாய நிலங்களில் ஏரி நீர் பெருமளவு புகுந்து, பல ஏக்கர் பயிர்கள் நாசமானது. இதையடுத்து கிராம மக்கள் ஒன்று கூடி, மணல் மூட்டைகள் அடுக்கி ஏரி உடைப்பை சரி செய்தனர். அதன்பின் வந்த அதிகாரிகள் இடத்தினை பார்வையிட்டு பாழான பயிர்களுக்கு உரிய நிவாரணமும் மற்றும் மதகுகள் சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

ஆனால், சேதமடைந்த பயிர்களுக்கு முறையான நிவாரணமு வழங்கவில்லை. ஏரியின் மதகுகள் மற்றும் கரைகளும் சீரமைக்கவில்லை.பின்னர், கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம் 29ம் தேதியன்று மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குடிமராமத்து பணியில் உத்திரமேரூர் ஒன்றியத்தில் மலையாங்குளம் உட்பட 6 கிராமங்களில் உள்ள ஏரிகளை சீரமைக்க ₹45 லட்சம் ஒதுக்கப்பட்டு, ஏரிகள் மற்றும் மதகுகள் சீரமைக்கப்பட்டு கரைகள் பலப்படுத்தியதாக கூறப்பட்டு இருந்தது.ஆனால் இதுவரை மலையாங்குளம் கிராமத்தில் உள்ள ஏரி தூர்வாரவில்லை. கரைகளும், மதகுகளும் சீரமைக்கப்படவில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், எங்கள் கிராம மக்கள் மற்றும் கால்நடைகளின் மிக முக்கிய நீராதாரமாக விளங்குவது இங்குள்ள ஏரி தான். இந்த ஏரியினை, அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால் மதகுகள் வலுவிழந்து கடந்த 2015ம் ஆண்டு பெய்த மழையில் உடைந்து பெரும் சேதம் ஏற்பட்டது. மழை பெய்தும் நாங்கள் பயிரிடமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டோம். மேலும் சேதமான பயிர்களுக்கு உரிய நிவாரணமும் எங்களுக்கு வழங்கவில்லை.

 இந்நிலையில் ஏரியினை சீரமைக்க தொகை ஒதுக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் ஏரி சீரமைக்கவில்லை. அவ்வாறு ஒதுக்கப்பட்ட பணம் எங்கே போனது? குடிமராமத்து பணி என்பது விவசாயிகளின் கண்துடைப்புக்காக கூறப்பட்டதா.காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்து போனது. ஏற்கனவே வறண்ட ஏரி மேலும் வறண்டு, பூமியின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து குடிநீருக்கே பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் கால்நடைகள் வளர்ப்பு மற்றும் விவசாயத்தை நம்பியுள்ள எங்களை போன்ற விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.ஏரியில் நீர் சிறிதளவு காணப்பட்டவுடன் மீன்பிடிக்க மட்டும் பொது பணித்துறை அதிகாரிகள் ஆர்வம் காட்டுகின்றனர். அதே அளவில், ஏரியை சீரமைக்கவோ அல்லது விவசாயிகளின் குறைகளை கேட்கவோ முன்வருவதில்லை.எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு குடிமராமத்து பணியில் மலையாங்குளம் ஏரியினை சீரமைக்க ஒதுக்கப்பட்ட பணம் எங்கே போனது. பணம் கையாடல் செய்யப்பட்டதா, முறைகேட்டில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் குறைகளை கண்டுகொள்ளாத பொதுப்பணித்துறை அதிகாரிகள், மீது உரிய நடவடிக்கை எடுத்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, போர்க்கால அடிப்படையில் ஏரியை தூர்வாரி மதகுகள் மற்றும் கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என்றனர்.

Tags : lake ,Malaiyankulam ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு