சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பில் சர்வீஸ் சாலை

* கண்டுகொள்ளாத போக்குவரத்து போலீசார்

* நடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதி

சென்னை: சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சர்வீஸ் சாலையை வாகனகள் ஆக்கிரமித்துள்ளதால், பொதுமக்கள் நடந்து செல்ல முடியமல் கடும் அவதியடைகின்றனர். இதனை போக்குவரத்து போலீசாரும் கண்டு கொள்ளவில்லை என குற்றஞ்சாட்டப்படுகிறது.சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வண்டலூரில் இருந்து அச்சிறுப்பாக்கம் வரை சாலையின் இரு புறங்களிலும் முக்கிய நகரங்கள் சந்திக்கும் இடங்களில் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது.அதில் முக்கிய பகுதிகளான வண்டலூர், ஊராப்பாக்கம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், காட்டாங்கொளத்தூர், சிங்கப்பெருமாள்கோயில், மகேந்திரா சிட்டி, செங்கல்பட்டு, படாளம், கருங்குழி, மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு வாகனங்கள் வருவதற்கும், தேசிய நெடுஞ்சாலையில் இருந்து நகர பகுதிகளுக்கு செல்வதற்கும் சர்வீஸ் சாலை உள்ளது.இந்த சர்வீஸ் சாலை அருகில் பஸ் பயணிகளை ஏற்றி செல்ல பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன, இந்த சர்வீஸ் சாலை மற்றும் பஸ் நிறுத்தத்தை எந்த ஒரு வாகனமும் பயன்படுத்த முடியவில்லை. அந்த சாலை முழுவதும் ஆட்டோக்கள், கனரக வாகனங்கள், பைக்குகள், கடைகள், உணவகங்கள் ஆகியவை ஆக்கிரமித்துள்ளன.

இதனால், சர்வீஸ் சாலையை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். வாகனங்கள் அனைத்தும் தேசிய நெடுஞ்சாலையிலேயே நிறுத்தப்பட்டு, அங்கிருந்து பஸ் பயணிகளை ஏறி செல்வதால் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு சிலர் காயமடைவதும், பலர் உயிரிழக்கும் சம்பவங்களும் நடக்கிறது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், முக்கிய பகுதிகளான கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், சிங்கப்பெருமாள்கோயில், வண்டலூர், காட்டாங்கொளத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள சர்வீஸ் சாலை முழுவதுமாக வாகனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. வெளியூர், உள்ளூர் பயணிகளும் நடுரோட்டிற்கு சென்று பஸ்சில் ஏறி செல்கின்றனர்.

பஸ் நிறுத்தம் கட்டப்பட்டு இருந்தாலும், மழை மற்றும் வெயில் காலங்களிலும் சர்வீஸ் சாலையில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், அரசு மற்றும் தனியார் பஸ்கள் தேசிய நெடுஞ்சாலையிலேயே நிறுத்தப்படுகின்றன. இதுபற்றி கேட்டால், சர்வீஸ் சாலை ஆக்கிரமிப்பை காரணம் கூறி, உள்ளே வர மறுக்கின்றனர்.பயணிகளை ஏற்றி செல்ல, பஸ் சர்வீஸ் சாலையில் வராததால் ஆக்கிரமிப்பாளர்கள் வாகன நிறுத்துமிடமாக மாற்றிவிட்டனர். இதனை போக்குவரத்து போலீசாரும், சட்டம் ஒழுங்கு போலீசாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வெளியூர் பஸ்கள் கனரக வாகனங்கள் நெரிசலில் சிக்குகின்றன.அரசு போக்குவரத்து துறையும், டிரைவர்கள் சர்வீஸ் சாலையில் சென்று உள்ளூர் மற்றும் டவுன் பஸ்கள் உள்ளே சென்று பயணிகளை ஏற்றி செல்ல உத்தரவிடவேண்டும். ஆக்கிரமிப்பாளர்கள் வாகனம் நிறுத்துபவர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: