பல்லாவரம் - கொளப்பாக்கம் சாலையில் மின்விளக்கு வசதி இல்லாததால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்: வழிப்பறி சம்பவங்கள் அதிகரிப்பு

பல்லாவரம்: பல்லாவரம் - கொளப்பாக்கம் சாலையில் மின்விளக்கு வசதி இல்லாததால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.பல்லாவரம் - கொளப்பாக்கம் பிரதான சாலை முக்கிய போக்குவரத்து தடமாக உள்ளது. பல்லாவரத்தில் இருந்து கெருகம்பாக்கம், ராமாபுரம், போரூர், மாங்காடு, கொளப்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். பல்லாவரத்தில் இருந்து ஜிஎஸ்டி சாலை வழியாக மேற்கண்ட இடங்களுக்கு செல்வதானால், அதிக நேரம் மற்றும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த சாலையில் பயணித்து வருகின்றனர். இச்சாலையில் குறுக்கிடும் அடையாறு ஆற்றின் மீது பலகோடி மதிப்பில், புதிய மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

ஆனால், இந்த சாலையில் மின்விளக்கு வசதி இல்லாததால், இரவு நேரங்களில் சாலை முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. கல்வி நிறுவனங்கள் இந்த பகுதியில் அதிகமாக உள்ளதால், தங்களது குழந்தைகளை மாலை நேரங்களில் டியூஷன் அழைத்துச் செல்லும் பெற்றோர்கள், வேலைக்கு சென்று வீடு திரும்பும் பெண்கள் மற்றும் வயதான வாகன ஓட்டிகள் இருள் சூழ்ந்த சாலையில் சிரமத்துடன் செல்கின்றனர். போதிய வெளிச்சம் இல்லாததால், அடிக்கடி பலர் விபத்தில் சிக்குகின்றனர்.  மேலும், இருளை பயன்படுத்தி பெண் வாகன ஓட்டிகளிடம் அத்துமீறுவது, வழிப்பறி போன்ற சம்பவங்களும் நடந்து வருகிறது. இதனால், கொளப்பாக்கம் பிரதான சாலையில் பெண் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணித்து வருகின்றனர். ஏற்கனவே மாங்காடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குற்றங்கள் அதிகரித்து காணப்படும் நிலையில், இருட்டை பயன்படுத்தி மீண்டும் குற்றச் செயல்கள் அரங்கேறுமோ என்று, இப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவித்தனர். எனவே பெருகி வரும் குற்றங்களை கருத்தில் கொண்டு, இந்த சாலையில் மின் விளக்குகள் அமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: