×

தி.நகரில் ‘ப்ரீ பெய்டு மீட்டர்’ பொருத்தும் பணி ஜூன் மாதத்திற்குள் முடிக்க திட்டம்: மற்ற பகுதிகளிலும் செயல்படுத்த முடிவு

சென்னை: தமிழகம் முழுவதும் வீடு, கடை, தொழிற்சாலைகளின் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவற்றுக்கு மின்சாரத்தின் தேவை முக்கியமான ஒன்றாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி மாநிலம் முழுவதும் 2.60 கோடிக்கு மேலான மின் இணைப்புகள் இருக்கின்றன. இதனால் சராசரி மின் தேவையின் அளவு 15,500 மெகாவாட்டுக்கும் அதிகமாக உள்ளது. இந்நிலையில் பல மின் பயனீட்டாளர்கள் தாங்கள் உபயோகிக்கும் மின்சாரத்திற்கு முறையாக  பணத்தை வாரியத்திற்கு செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதில், உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் மின்வாரியத்திற்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்படுகிறது. அதேபோல் ஒருசிலர் வாரியத்தை ஏமாற்றி மின்சாரத்தை பயன்படுத்தி  வருகின்றனர். அதாவது தெருவோரங்களில் மின்விநியோகம் செய்வதற்காக  அமைக்கப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மர், தெருவோர மின் இணைப்பு பெட்டிகளில் இருந்தும் கொக்கி போட்டு மின்சாரம் திருட்டுத்தனமாக எடுத்து பயன்படுத்தப்படுகிறது.

மேலும் ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டுக்கு மின்சாரம் எடுப்பதும், மீட்டரை ஓடவிடாமல் காந்தம் போன்ற பொருளை வைப்பது ஆகிய செயல்களை செய்து வருகின்றனர். அவ்வாறு செய்வதால் வாரியத்திற்கு பலகோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க ‘ப்ரீ பெய்டு மீட்டர்’ பொருத்த திட்டமிடப்பட்டது.  அதன்படி தமிழகத்தில் இத்திட்டம் துவங்கப்பட்டிருக்கிறது. முதல்கட்டமாக சென்னை, தி.நகரில் உள்ள குடியிருப்பு, அலுவலகங்களில் ஆய்வு நடத்தப்பட்டு, அங்கு மீட்டர் sபொருத்துவதற்கான பணி நடந்து வருகிறது. இப்பணி நிறைவடைந்ததும் மாநிலம் முழுவதும் திட்டம் விரிவுபடுத்தப்படும். தற்போது இப்பணியை வரும் ஜூன் மாதத்திற்குள் முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: பல மின் பயனீட்டாளர்கள் குறிப்பிட்ட நேரத்தில் மின் கட்டணத்தை செலுத்துவதில்லை. இதைத்தடுக்கும் வகையில், ‘ப்ரீ பெய்டு மீட்டர்’ கொண்டுவரப்பட்டது. இதன் மூலமாக மின் பயனீட்டாளர்கள், மொபைல் போனுக்கு ‘ரீசார்ஜ்’  செய்வது போல், மின் கட்டணத்தையும் மாதம்தோறும் வாரியத்திற்கு முதலில்  செலுத்தி ‘ரீசார்ஜ்’ செய்துகொள்ள வேண்டும்.  அதன் பிறகு, அவர்கள்  ‘ரீசார்ஜ்’ செய்த தொகைக்கு தகுந்த மின்சாரம் வழங்கப்படும். இதேபோல்  மின் பயனீட்டாளர்கள் மாதம்தோறும் முதலில் ‘ரீசார்ஜ்’ செய்துகொள்ள  வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே மின்சாரத்தை தொடர்ந்து பயன்படுத்த முடியும்.  இல்லாவிட்டால், மின்சாரம் கிடைக்காது. மேலும் திருட்டுத்தனமாக மின்சாரம் எடுத்தாலும் அது கண்டுபிடிக்கப்படும். இந்நிலையில் சம்மந்தப்பட்ட திட்டத்தை திநகரில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. மேலும் அங்கு 1.50 லட்சம் மீட்டர்கள் முதல்கட்டமாக பொருத்தவும் திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இப்பணியை வரும் ஜூன் மாதத்தில் முடிக்க முடிவு செய்துள்ளோம். அதன்பிறகு படிப்படியாக மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...