50 ஆயிரம், ஐபோன் லஞ்சமாக வாங்கிய இன்ஸ்பெக்டர் பணியிட மாற்றம்: கூடுதல் ஆணையர் நடவடிக்கை

திருவொற்றியூர்: மாதவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்தவரிடம் ₹50 ஆயிரம் மற்றும் ஐபோன் லஞ்சமாக வாங்கிய குற்றப்பிரிவு ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். பெரும்புதூர் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான இடம் மாதவரம் மேம்பாலம் அருகே உள்ளது. இந்த நிலம் சம்பந்தமாக இவருக்கும், வேறு ஒரு நபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.  இதையடுத்து இந்த நில தகராறு சம்பந்தமாக  நடவடிக்கை எடுக்குமாறு சில தினங்களுக்கு முன், மாநகர காவல் வடக்கு கூடுதல் ஆணையர் தினகரனிடம் சரவணன் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு, மாதவரம் காவல் குற்றப்பிரிவு ஆய்வாளர் சுரேஷ்குமாருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி, இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் விசாரணை நடத்தினார்.பின்னர், இந்த புகார் மீது நடவடிக்கை எடுத்ததற்காக மனுதாரர் சரவணனிடம், ஆய்வாளர் சுரேஷ்குமார் லஞ்சமாக ₹50 ஆயிரம் மற்றும் ஒரு ஐபோன் கேட்டு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Advertising
Advertising

இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் சரவணன் தன்னுடைய நிலத்தகராறு பிரச்னையில்  நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்ட கூடுதல் ஆணையர் தினகரனை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார். அப்போது, குற்றப்பிரிவு ஆய்வாளர் சுரேஷ்குமாருக்கு லஞ்சம் கொடுத்த விஷயத்தை கூடுதல் ஆணையரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் லஞ்சம் கொடுத்ததற்காக சரவணனை கண்டித்ததோடு, உடனடியாக சரவணனிடம் லஞ்சமாக வாங்கியவற்றை  அரை மணி நேரத்துக்குள் அவரிடம் திருப்பித் தரவேண்டும் என்று ஆய்வாளர் சுரேஷ்குமாருக்கு வயர்லெஸ் மூலம் உத்தரவிட்டுள்ளார்.ஆனால் ஆய்வாளர் சுரேஷ்குமார் இதனை பொருட்படுத்தவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கூடுதல் ஆணையர் தினகரன், உயர் அதிகாரி பரிந்துரை செய்த புகார் மீது நடவடிக்கை எடுக்க லஞ்சம் பெற்றதாக குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுரேஷ்குமாரை ஆயுதப்படைக்கு அதிரடியாக மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

Related Stories: