×

வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசியது மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்த மழை

சேலம், ஏப்.23: சேலம் மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்ததது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் கரைபுரண்டு ஓடியது. ஆத்தூர் சுற்று வட்டார பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது.தமிழகத்தில் கடந்த பிப்ரவரி இறுதி வாரத்தில் இருந்தே வெயில் தாக்கம் தொடங்கியது. கடந்தாண்டு போதிய மழை இல்லாததால், நடப்பாண்டு முன்கூட்டியே வெயிலின் தாக்கம் அதிகரித்தது. வெயில் தாக்கம் காரணமாக ஏரி, குளம், குட்டைகள் வேகமாக வறண்டன. இதேபோல் கிணறு, போர்வெல்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது. இதனால் விவசாயப்பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது.
கடந்த இரு மாதமாக ஒரு மழைக்கூட இல்லாததால், வெயிலின் தாக்கத்தால் சாலைகளில் அனல்காற்று வீசியது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதிக்குள்ளாகினர். வீடுகளில் கடும் புழுக்கம் ஏற்பட்டதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தூங்க முடியாமல் அவதிப்பட்டனர்.

இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த இரு மாதமாக வெயிலின் கொடுமையை அனுபவித்து வந்த மக்கள், மழை காரணமாக சற்று மகிழ்ச்சியடைந்துள்ளனர். வீடுகளில் புழுக்கம் போய் குளிர் காற்று வீசி வருகிறது.
இந்த நிலையில் ஆத்தூர் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே பலத்த அனல் காற்றுடன் வெயில் கொளுத்தியது. இதனால் பொது மக்கள் தெருக்களில் வருவதற்கு அச்சப்பட்டு வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர். மாலை 5 மணிளவில், கருமேகங்கள் சூழ்ந்து, பலத்த காற்று, இடி மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் பாத்திரத்தில் சேகரித்தனர்.2 மணி நேரத்துக்கு மேலாக கொட்டித் தீர்த்த மழையால், ஆத்தூர் நகரப்பகுதியில் உள்ள சாலைகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. ஆத்தூர் பஸ் ஸ்டாண்ட் வெள்ளைப் பிள்ளையார் கோயில் அருகே சாக்கடை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு, வெள்ளை பிள்ளையார் கோயில் வளாகத்திற்குள் தண்ணீர் நுழைந்தது. மேலும் வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தன. ஆத்தூரில் தொடர்ந்து 2மணி நேரத்துக்கும் மேலாக மழை கொட்டியதால், மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டு மக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த 15 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது நல்ல மழை பெய்துள்ளது. இதனால் பயிர் செய்வதற்கான சூழல் உள்ளது,’’ என்றனர்.இதே போல், இடைப்பாடி அருகே கொங்கணாபுரம், ரங்கம்பாளையம், ரட்டியப்பட்டி, கன்னந்தேரி, மூலப்பாதை, கோனசமுத்திரம், வெள்ளாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. கன்னந்தேரி சாலையில் புளிமரம் உடைந்து சாலையில் விழுந்ததது. இது குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலை துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பொக்லைன் மூலம் மரத்தை அகற்றினர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல் நேற்றிரவு 7.45 மணியளவில் சேலத்தில் குளிர்ந்த காற்று வீசியது. பின்னர் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இம்மழையால் சேலம் நகரில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் கரைபுரண்டு ஓடியது. நீண்ட நாட்களுக்கு பிறகு இரண்டு மணிநேரத்திற்கு மேலாக மழை பெய்ததால் பூமி குளிர்ந்து குளிர் காற்று வீசியது. இதேபோல், ஓமலூர், காடையாம்பட்டி, ஆட்டையாம்பட்டி, மேட்டூர், தாரங்கலம் உள்ளிட்ட பகுதியில் பரவலாக மழை பெய்தது. சேலம் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

Tags : district ,
× RELATED தபால் வாக்கு செலுத்த ஏதுவாக போலீசாருக்கு சிறப்பு வாக்கு சாவடி மையம்