×

25 சதவீத ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை 389 தனியார் பள்ளிகளில் 6,288 இடங்கள் ஒதுக்கீடு

சேலம், ஏப்.23: கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் இலவச சேர்க்கைக்கு, சேலம் மாவட்டத்தில் 389 தனியார் பள்ளிகளில், 6,288 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக விண்ணப்பிக்க மே 18ம் தேதி கடைசிநாளாகும். இலவச கட்டாய கல்வி சட்டத்தின்படி, ஏழைகள் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளை சிறுபான்மையற்ற தனியார் பள்ளியில் 25 சதவீத இடங்களுக்கு, கட்டணமில்லாமல் சேர்த்துக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2013-14ம் கல்வியாண்டு முதல், இச்சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
அதன்படி, நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு நேற்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கப்பட்டு வருகிறது. பெற்றோரின் ஆண்டு வருமானம் ₹2 லட்சத்திற்குள் இருப்பின், தங்களது வசிப்பிடத்திற்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்குள் உள்ள தனியார் பள்ளிகளில், தங்களது குழந்தைகளை 8ம் வகுப்பு வரை இலவசமாக படிக்க வைக்கலாம்.

 இதற்கென www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்தும், ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.  ஒருவர், 5 பள்ளிகளுக்கு விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். ஆன்லைனிலேயே, தங்களது பகுதியில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் பள்ளிகள், அங்குள்ள இடங்களின் எண்ணிக்கை குறித்து தெரிந்து ெகாள்ளலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இயலாதவர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் வட்டார கல்வி அலுவலகங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும், சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நேரடியாகவும் சென்று விவரங்களை கேட்டறியலாம்.

ஆன்லைன் விண்ணப்பத்துடன், குழந்தையின் புகைப்படம், பிறப்பு சான்றிதழ், பெற்றோரின் முகவரி சான்று, வருமானச்சான்று ஆகியவற்றை இணைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பள்ளியில் ஒதுக்கப்பட்ட இடங்களை காட்டிலும், கூடுதலானோர் விண்ணப்பித்திருந்தால் வெளிப்படையான முறையில் குலுக்கல் நடத்தி, மாணவர் சேர்க்கை நடத்தப்படவுள்ளது. இதுகுறித்து சிஇஓ கணேஷ்மூர்த்தி கூறுகையில், ‘‘சேலம் மாவட்டத்தில் உள்ள 389 சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில், கட்டாய கல்வி சட்டத்தின் படி சேர்க்கை நடைபெறுகிறது. இலவச ஒதுக்கீட்டில் உள்ள 6,288 இடங்களுக்கு, பெற்றோர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதற்கான கடைசி நாளாக மே 18ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பெற்றோர்கள், இதனை தகுந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,’’ என்றார்.

Tags : schools ,
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர்...