வரத்து சரிவால் தக்காளி விலை உயர்வு

சேலம், ஏப்.23: வரத்து சரிவால் தக்காளி விலை உயர்ந்துள்ளது. கிலோ ₹38க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் சேலம், தர்மபுரி, ஈரோடு உள்ளிட்ட மாநிலங்களில் அதிகளவில் தக்காளி விளைவிக்கப்படுகிறது. மேலும், ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தக்காளி சேலத்திற்கு வருகிறது. தற்போது தமிழகத்தில் கடும் வெயில் வாட்டி வருகிறது. சேலம், நாமக்கல் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தொடர்ந்து 105 டிகிரி வெயில் வாட்டுகிறது. இதனால், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக சரிந்துள்ளது. தண்ணீர் பற்றாக்குறையால் தக்காளி மகசூல் குறைந்துள்ளது. சந்தைக்கு வரத்து இல்லாததால் விலை அதிகரித்துள்ளது.

இது பற்றி விவசாயிகள் கூறுகையில், “பொதுவாக வெயில் காலங்களில்தான் தக்காளி வரத்து அதிகமாக இருக்கும். ஆனால் கடந்த இரண்டு ஆண்டாகவே பருவமழை சரிவர பெய்யவில்லை. இதனால் நிலத்தடிநீர் குறைந்து கிணறுகள், போர்வெல் வறண்டு விட்டது. தண்ணீரை விலைக்கு கூட வாங்கி பார்த்து விவசாயம் செய்துவிட்டோம். ஆனாலும் தக்காளி செடிகளை பாதுகாக்க முடியவில்லை. தற்போது மிகவும் குறைந்த பரப்பில் மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது. சரிவர மழை இல்லாததால் அடிக்கும் கோடை வெயிலால் செடிகள் வாடி வதங்கி வருகிறது. நன்கு வளர்ந்த செடிகளும் கூட பட்டுப்போய் விட்டன. இதனால் மேலும் வரத்து குறையும்” என்றனர். வியாபாரிகள் கூறுகையில், “தற்போது நாட்டு தக்காளி, பெங்களூரு தக்காளி போன்றவை மிகவும் குறைந்த அளவே மார்க்கெட்டுக்கு வருகிறது. இதனால் கிலோ ₹38க்கு விற்கிறது. நன்கு கனிந்த, பழங்கள் ₹20க்கு விற்கிறது,’’ என்றனர்.

Related Stories: