×

கறிவேப்பிலை விலை கிடு கிடு உயர்வு

சேலம், ஏப்.23: கோடை வெயில், நோய் தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் கறிவேப்பிலை செடிகள் காய்ந்து கருகியதால் மகசூல் குறைந்து விலை அதிகரித்துள்ளது. கிலோ ₹45க்கு விற்பனையாகிறது. சேலம் மாவட்டத்தின் கன்னங்குறிச்சி, மல்லூர் மற்றும் ஆத்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளான தலைவாசல், வீரகனூர், பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உடலுக்கு ஆரோக்கியம், சமையலுக்கு மணமூட்டக்கூடிய வாசனை பயிரான கறிவேப்பிலை சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இதனை பறித்து சேலம் மட்டுமின்றி சென்னை, மதுரை, கோவை, திருச்சி மற்றும் புதுச்சேரி, கேரளா என பல்வேறு பகுதிகளுக்கு வியாபாரிகள் அனுப்பி வைக்கின்றனர்.

இதுகுறித்து கறிவேப்பிலை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கூறுகையில், ‘’கடந்த இரண்டு ஆண்டாகவே பருவமழை பொய்துவிட்டது. இதனால் நிலத்தடிநீர் மட்டம் அதலபாதாளத்திற்கு சென்று, கிணறுகள் வறண்டுவிட்டது. இதனால் கறிவேப்பிலை செடிகளுக்கு போதிய தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. செடிகள் தண்ணீர் இன்றி காய்து, கருகி வருகிறது. மேலும், கறிவேப்பிலை செடிகளில் இழைபுள்ளி நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் சுருண்டுபோய் காணப்படுகிறது.

மேலும், செடிகள் முழுவதும் சாம்பல் படிந்து வருகிறது. இதன் காரணமாக கறிவேப்பிலை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு கிலோ ₹30 முதல் ₹35 வரை வியாபாரிகளுக்கு கொடுக்கிறோம். கறிவேப்பிலை செடிகள் நட்ட 14 மற்றும் 15 மாதத்தில் இருந்து அறுவடை கிடைக்கும். அதிலிருந்து மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஏக்கருக்கு, சுமார் 4 முதல் 5 டன் வரை மகசூல் கிடைந்து வந்தது.  தற்போது வெயில், நோய் தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் மகசூல் 2 முதல் 3 டன் வரை மட்டுமே கிடைக்கிறது என்றார். தற்போது கறிவேப்பிலை விலை உயர்ந்தாலும் கூட அதிக மகசூல் இல்லாததால் ஏமாற்றமடைந்துள்ளோம்’’ என்றார்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘’கறிவேப்பிலை வரத்து குறைந்துள்ளது. இதனால், விலை அதிகரித்துள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு கட்டு ₹ 5 முதல் ₹ 8க்கு விற்பனை செய்தோம். தற்போது, ஒரு கட்டு கட்ட முடியவில்லை. கிலோ ₹40 முதல் ₹45க்கு விற்பனை செய்து வருகிறோம்’’ என்றார்.

Tags : price hike ,
× RELATED விலைவாசி உயர்விற்கு ஒன்றிய அரசுதான் காரணம்: ஓபிஎஸ் குற்றச்சாட்டு