பஞ்சு விலை தொடர்ந்து அதிகரிப்பு நூற்பாலைகள் உற்பத்தியை குறைத்தன

கோவை, ஏப்.23: வரத்து குறைவு மற்றும் சில ஜின்னிங் ஆலைகள் பஞ்சு உற்பத்திய   நிறுத்திய காரணத்தினால் பஞ்சு விலை 13 சதவீதம் வரை உயர்ந்துள்ள நிலையில், தமிழகத்தில்  43 சதவீத நூற்பாலைகளை உற்பத்தியை குறைத்துள்ளன.இந்தியாவில்   அக்டோபர் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை பருத்தி ஆண்டு கணக்கிடப்பட்டு   வருகிறது. அதன்படி, ஒவ்வொரு பருத்தி ஆண்டிலும் தமிழக நூற்பாலைகள் ஏறத்தாழ 1   கோடிக்கும் அதிகமான பஞ்சு பேல்களை மகாராஷ்டிரா, குஜராத் மற்றும்   தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து வாங்கி வருகின்றன. இந்த ஆண்டின்   தொடக்கத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலை கொள்கையினால்   இந்த வருடத்தின் சீசன் விலை ரூ.45 ஆயிரத்தில் தொடங்கியது.இந்த   நிலையில், மார்ச் மாதம் பஞ்சின் விலை திடீரென 8 சதவீதம் வரை அதிகரித்தது.   இதனால் ஏற்றுமதியாளர்கள், நூல் மற்றும் ஆடைகள் உற்பத்தியாளர்கள்   கலக்கமடைந்தனர். திடீரென பஞ்சு விலை அதிகரிப்பால் நூல் விலை 4 முதல் 5   சதவீதம் வரை அதிகரித்தது. இந்த நிலையில், பஞ்சு விலை தற்போது 13 சதவீதம்   அதிகரித்துள்ளது. இதனால் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சந்தை   நிலவரங்களை அறிந்து, கவனமாக இருக்க வேண்டும் என்று தொழில் துறையினர்   அறிவுறுத்தியுள்ளனர்.

இது குறித்து ஜவுளி தொழில் கூட்டமைப்பான இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேசனின் ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் கூறியதாவது:- மார்ச்   முதல் வாரத்தில் இருந்து பஞ்சின் விலை உயர தொடங்கியது. அப்போது ஒரு கண்டி   பஞ்சு ரூ.42 ஆயிரத்து 700ஆக இருந்த பஞ்சுவிலை, தற்போது ரூ.48 ஆயிரத்து   200க்கு விற்பனையாகிறது. போக்குவரத்து செலவுடன் சேர்த்து பஞ்சு இங்கு வரும்   போது ரூ.49 ஆயிரத்து 700ஆக உள்ளது. அதன்படி, பஞ்சு விலை சுமார் 13  சதவீதம்  அதிகரித்துள்ளது. பருத்தி வரத்து குறைவு, விவசாயிகள் மற்றும்  வியாபாரிகள்  பருத்தியை இருப்பு வைத்தது உள்ளிட்ட பல காரணங்களால் இந்த விலை  உயர்வு  ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. எங்கள் அமைப்பில் உள்ள உறுப்பினர்களிடையே ஏற்பட்ட சர்வே அடிப்படையில் விலை அதிகரிப்பு மற்றும் ஆட்கள்  பற்றாக்குறை  காரணமாக 43 சதவீதம் நூற்பாலைகள் தங்களது உற்பத்தியில் இருந்து  10 முதல் 30  சதவீதத்தை குறைத்துள்ளனர்.பஞ்சு விலை  அதிகரிப்பால் நூல் விலை  அதிகரித்துள்ளது. ஆனால், 13 சதவீதம் உயரவில்லை.  மாறாக 4 முதல் 5 சதவீதம்  மட்டும் அதிகரித்துள்ளது. மே மாதம் முதல்  வாரத்தில் அனைத்து விதமான  வார்ப்பு மற்றும் ஹொசைரி நூல் விலைகளும்  அதிகரிக்க வாய்ப்புள்ளது.  உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மற்றும்  ஏற்றுமதியாளர்கள் இந்த விலை உயர்வை  கணக்கில் கொண்டு இனி வரும் ஆர்டர்களை  செய்தால் இழப்பு இருக்காது.இவ்வாறு பிரபு தாமோதரன் கூறினார்.

Related Stories: