சாலையோரம் காய்ந்துபோன நிலையில் உயிர்பலிக்கு காத்திருக்கும் புளியமரங்கள்

வாழப்பாடி, ஏப்.23: வாழப்பாடி பகுதியில் சாலையோரம் காய்ந்துபோன நிலையில் உயிர்பலிக்கு காத்திருக்கும் புளியமரங்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சி பகுதியில் கடலூர் மெயின் ரோட்டில் புளிய மரங்கள் அணிவகுத்துள்ளன. நூற்றாண்டு பழமைவாய்ந்த இந்த மரங்கள் கடந்த காலங்களில் இலையுதிர் காலங்களை தவிர எப்போதும் பசுமையாக காணப்படும். ஆனால், சமீப காலங்களில் ஆண்டு முழுவதும் பட்டுப்போன நிலையிலேயே உள்ளது. பல்வேறு இடங்களில் எப்போதும் வேண்டுமானாலும் கீழே விழக்கூடிய ஆபத்தான நிலையில் உள்ள மரங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காய்ந்து போன மரங்களை அப்புறப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், சில நாட்களுக்கு முன்பு மரத்தடியில் நின்று கொண்டிருந்த கருமந்துறையைச் சேர்ந்த மணி என்பவர் மீது காய்ந்துபோன மரக்கிளை விழுந்து அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இறந்துள்ள மரங்களை உடனடியாக அகற்றாவிட்டால் எப்போது வேண்டுமானாலும் உயிர்பலி ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. லேசான காற்றுக்கே அசைந்தாடும் மரங்கள், பலத்த காற்றுக்க தாக்குபிடிக்க முடியாமல் அடியோடு சாயும் நிலையில் உள்ளது. எனவே, பட்டுப்போன மரங்களை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: