×

கூத்தாநல்லூர் பகுதியில் இரவு நேரத்தில் தீப்பிடித்து எரியும் மூங்கில் காடுகள் விஷமிகள் கைவரிசையா? பொதுமக்கள் அச்சம்


கூத்தாநல்லூர், ஏப். 23: கூத்தாநல்லூர் அருகே அடிக்கடி தீப்பிடித்து எரியும் மூங்கில் காடுகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். விஷமிகள் தீ வைக்கின்றனரா எனவும் பொதுமக்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். கூத்தாநல்லூர் அருகே உள்ள கீழ்பாதி மற்றும் வடகோவனூர் விலக்கு ஆகிய இடங்களில் கோரையாற்றின் கரையோரம் உள்ள மூங்கில் காடுகள் திடீரென தீப்பிடித்து எரிகிறது. இதற்கான காரணம் தெரியாமல் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து  அந்த பகுதியில் உள்ள சிலரிடம் கேட்டபோது, இந்தப்பகுதியில் உள்ள சாலையில் இரவு நேரத்தில் அதிக ஆள் நடமாட்டம் இருப்பதில்லை. எனவே அப்பகுதியை சேர்ந்தவர்கள் தங்களது நண்பர்களுடன் இங்கே வந்து மது அருந்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அவர்கள் மது குடிக்கும்போது புகைப்பிடித்துவிட்டு சிகரெட் துண்டுகளை அப்படியே வீசி எறிவதால் மூங்கில் காட்டில் கிடக்கும் மூங்கில் இலை சருகுகளில் தீப்பிடித்து விடுகிறது. இந்த தீ மேலும் பரவி அருகில் உள்ள மூங்கில் காட்டை முற்றிலும் எரித்து அழித்து விடுகிறது என்கின்றனர்.

    அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் சிலரிடம் கேட்டபோது இந்த ஆற்றங்கரை ஓரத்தில் இடுகாடுகள் இருப்பதால் இறந்தவர்களின் உடலை இந்த சாலை வழியே தூக்கிச்செல்லும்போது வாண வேடிக்கைகள் மற்றும் பட்டாசுக்களை கொளுத்திப்போட்டபடியே தூக்கி செல்கின்றனர். பட்டாசில் உள்ள தீப்பொறி மூங்கில் சருகுகளில் பட்டு தீப்பிடித்து விடுகிறது என்கின்றனர். சில தினங்களுக்கு முன் இதே போல பிடித்த தீ அருகில் உள்ள  வீடுகளுக்கும் பரவ இருந்தபோது தீயணைப்புத்துறையினர் வந்து அணைத்து பெரும் விபத்தை தவிர்த்தனர் என்றனர். இரவு நேரங்களில் ஏற்படும் இத்தகைய தீ விபத்துக்களை தடுக்க காவல்துறையினர் இரவு நேரத்தில் இந்த பகுதியில் ரோந்துப்பணியை மேற்கொள்வதுடன், ஆபத்தை விளைவிக்கும் பட்டாசுக்களை கொளுத்திப்போடவும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : Bamboo forests ,Koothanallur ,area ,
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...