×

அரசு மகளிர் கல்லூரியில் விண்ணப்பம் வாங்க திரண்ட மாணவிகள்

நாமக்கல், ஏப்.23:  நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை கல்லூரியில், விண்ணப்பம் விநியோகம் நேற்று தொடங்கியது. முதல் நாளில் 1,200 விண்ணப்பங்களை மாணவிகள் வாங்கி சென்றனர். நாமக்கல்லில் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு இளங்கலை தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், வரலாறு, பொருளியில், வணிகவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், நுண்ணுயிரியல் மற்றும் ஊட்டச்சத்து என 13 வகையான இளங்கலை பாடப்பிரிவுகள் உள்ளது. இந்த பாடபிரிவுகளில் சேருவதற்கு, நேற்று முதல் விண்ணப்பங்கள் வழங்கும் பணி தொடங்கியது. இளங்கலை பட்ட படிப்புகளுக்கு ₹50 எனவும், முதுநிலை பட்ட படிப்புகளுக்கு ₹60 கட்டணமாக செலுத்தி விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம். விண்ணப்பம் வரும் மே 10ம் தேதி வரை வழங்கப்படுகிறது.  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவிகளுக்கு விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.

பிளஸ்2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், விளையாட்டு, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் என்சிசி இடஒதுக்கீட்டின் படியும், வரும் மே 24ம் தேதியும், பிஎஸ்சி பாட பிரிவுகளுக்கு மே 28ம் தேதியும், பிஏ பாட பிரிவுகளுக்கு மே 30 மற்றும் ஜூன் 6ம் தேதி முதல் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது. இதனையடுத்து, பிஎஸ்சி, பிஏ மற்றும் பிகாம் பாட பிரிவுகளுக்கு ஜூன் 6 மற்றும் 10ம் தேதிகளில் 2ம் கட்ட கலந்தாய்வு நடக்கிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், மே 10ம் தேதி வரை திரும்ப அளிக்கலாம்.  நேற்று முதல் நாளில், நாமக்கல் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவிகள், தங்கள் பெற்றோருடன் விண்ணப்பங்களை வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நேற்று ஒரே நாளில் 1,200 விண்ணப்பங்களை மாணவிகள் பெற்று சென்றனர்.

Tags : Government Women's College ,
× RELATED மாதவிடாய் குறித்து விழிப்புணர்வு.. மகளிர் கல்லூரி மாணவிகள் அசத்தல்