மாநகராட்சி உர கிடங்கில் தீவிபத்து குப்பைகளை கொட்ட முடியாமல் சாலையோரம் நின்ற வாகனங்கள் சிரமத்துக்குள்ளான பொதுமக்கள்

தஞ்சை, ஏப். 23: தஞ்சை மாநகராட்சி உர கிடங்கில் ஏற்பட்டுள்ள தீவிபத்தால் நேற்று சேகரிக்கப்பட்ட குப்பைகளை கொட்ட முடியாமல் வாகனங்கள் சாலையில் வரிசையாக நின்றன. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர்.

தஞ்சை சீனிவாசபுரம் அருகே ஜெபமாலைபுரத்தில் உள்ள குப்பை கிடங்கில் மாநகரில் 51 வார்டுகளிலும் நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன.இக்கிடங்கில் கோடைகாலத்திலும், வெப்பம் அதிகமாக உள்ள நாட்களிலும் தீ விபத்து ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் இக்கிடங்கில் நேற்று முன்தினம் திடீரென தீ பற்றி எரிந்தது. இதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரம் முயற்சி செய்து தீயை அணைத்தாலும் தொடர்ந்து புகைமூட்டமாகவே உள்ளது. இதனால் ஜெபமாலைபுரம் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இதனிடையே மாநகராட்சி பணியாளர்கள், குழாய்கள் மூலம் தண்ணீர் பாய்ச்சி அணைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அப்பகுதி புகையாக இருப்பதால் வாகனங்கள் உள்ளே செல்ல முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் மாநகரில் நேற்று குப்பைகள் சேகரித்து சென்ற லாரிகள், வேன்கள் உள்ளே செல்ல முடியாத அளவுக்கு புகைமூட்டமாக இருந்தது. மேலும் நுழைவுவாயிலிலும் குப்பைகள் கொட்டப்பட்டிருந்தன. இதனால் குப்பைகள் அள்ளப்பட்டு வந்த வாகனங்கள் சாலையில் வரிசையாக நின்றன. தகவல அறிந்ததும் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் மற்றும் அலுவலர்கள் உரக்கிடங்குக்கு சென்று வழியில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். விரைவில் குப்பைகளை உள்ளே கொட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று அலுவலர்கள் தெரிவித்தனர்.

Related Stories: