சுவாமிமலை காவிரி ஆற்றில் மணல் கொள்ளை கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்

கும்பகோணம், ஏப். 23: சுவாமிமலை காவிரியாற்றில் தொடர் மணல் கொள்ளை நடந்து வருகிறது. இதை தடுக்க முடியாமல் மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாமல் உள்ளது. கும்பகோணம் அடுத்த சுவாமிமலை காவிரியாற்றில் தொடர் மணல் கொள்ளை நடந்து வரகிறது. காவிரியாற்றின் கரையோரத்தில் சர்வமானிய தெரு, கள்ளர் தெரு, முராரி காலனி பகுதிகளில் தினம்தோறும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் காவிரி ஆற்றிலிருந்து கூலியாக ரூ.300 கொடுத்து மணலை இந்த 3 தெருக்களில் உள்ள திடலில் கொட்டி வைத்து விடுவர். பின்னர் மணலை லாரி மற்றும் மாட்டு வண்டிகளில் மாலை மற்றும் அதிகாலையில் ஏற்றி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள்.இதனால் ஆற்றில் பள்ளங்கள் ஏற்பட்டு கட்டாந்தரையாகி விட்டது. மேலும் ஆற்றில் செடி, கொடி, கோரைகள் முளைத்தால் ஆற்றின் போக்கு மாறி ஊருக்குள் தண்ணீர் புகுந்து அப்பகுதியை அழித்து விடும் நிலை ஏற்படும். இதுகுறித்து அதிகாரிகளிடம் பொதுமக்கள் தெரிவித்தும் மணல் கொள்ளையை தடுக்கவில்லை. லாரிகள் மற்றும் மாட்டு வண்டிகளுக்கான மாமூலை பெற்று கொண்டு போலீசார் பாதுகாப்பாக மணலை அனுப்பி வைப்பதால் திருட்டுத்தனமாக மணல் கொள்ளையடிக்கும் கும்பல் எந்தவிதமான அச்சமின்றி கடந்த சில மாதங்களாக இந்த செயலில் ஈடுபட்டு வருகிறது.

Advertising
Advertising

தற்போது தஞ்சை மாவட்டத்தில் மணல் குவாரிகள் இல்லாததால் ஒரு மாட்டு வண்டி மணலை ரூ.1000 முதல் ரூ.1500 வரை விற்கின்றனர். இதேபோல் லாரியில் ஒரு யூனிட் மணல் ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு காவிரி ஆற்றில் மணல் எடுத்து வந்தபோது அரசு பள்ளி சுவரை மர்மநபர்கள் இடித்து தள்ளி விட்டு சென்றனர்.ஆனால் இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவிரி ஆற்றில் அளவுக்கு அதிகமாக மணல் எடுத்தால் தண்ணீர் வரும் நேரங்களில் குளிப்பதற்கு செல்பவர்கள் மடுக்களில் விழுந்து உயிர்பலி ஏற்பட வாய்ப்புள்ளது.எனவே சுவாமிமலை காவிரியாற்றில் மணல் கொள்ளையை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: