×

மாற்றுப்பாதை அமைக்காமல் ரயில்வே லைன் பாதையை அடைக்க கூடாது பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

மயிலாடுதுறை, ஏப்.23:    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே குத்தாலம் தாலுகா திருவாலங்காடு பகுதியில் ரயிலடித்தெரு, கன்னிகோவில் தெரு, அளவுதடி தெரு, வள்ளுவன் தெரு ஆகிய நான்கு தெருக்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் மெயின்ரோட்டில் இருந்து தங்கள் தெருக்களுக்கு செல்வதற்கும், ரயில்வே லயனை ஒட்டியபடி இருக்கின்ற இடத்தை சாலையாக கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இரட்டை ரயில்பாதை அமைக்கும் பணி மேற்கொள்ள இருப்பதால் திருவாலங்காடு பகுதியில் ரயிலடித்தெரு உட்பட 4 தெருக்களுக்கு செல்லக்கூடிய மக்கள் இந்த பாதையை பயன்படுத்தக்கூடாது என்று ரயில்வே நிர்வாகம் அந்த சாலையின் நடுவே கருங்கல்லை பதித்து சாலையை மூடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.  இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் எங்கள் வீடுகளுக்கு செல்வதற்கு இதுதான் வழி. இதனை அடைத்துவிட்டால் நாங்கள் எப்படி செல்ல முடியும் என்று கூறி பணியை தடுத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த குத்தாலம் தாசில்தார் தர், ரயில்வே பொறியாளர் சண்முகசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். திருவாலங்காடு ரயிலடி தெரு உள்ளிட்ட நான்கு தெருக்களுக்கு செல்லும் வகையில் அருகில் புதியதாக சாலை அமைத்துகொடுப்பது என்று வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து  புதிய சாலை அமைத்து கொடுக்கும்  வரை தற்போது இருக்கின்ற பாதையை அடைக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Tags : public ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...