×

அதிக கூட்டத்தை பயன்படுத்தி சிறப்பு பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல் பயணிகள் பரிதவிப்பு

மயிலாடுதுறை ஏப்.23: அதிக கூட்டத்தை பயன்படுத்தி சிறப்பு பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் பயணிகள் பரிதவித்துள்ளனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறையிலிருந்து சீர்காழிக்கு செல்ல பேருந்து கட்டணம் ரூ.13ஆகும்.  ஏதாவது விசேஷ நாட்கள் என்றால் அரசு சிறப்பு பேருந்தை இயக்கும். அந்த நேரத்தில் விரைவு போக்குவரத்துக் கட்டணமான ரூ.20வை சாதாரண பேருந்திலும் வசூல் செய்வார்கள்.  இது எங்காவது விழா நடக்கும் வேளையில் விழாவிற்கு செல்லும் பயணிகள் நலன்கருதி இந்த சிறப்பு ஏற்பாட்டை செய்வது வாடிக்கை. நேற்று எந்த விசேஷமும் இல்லை. ஆனால் திடீரென மயிலாடுதுறையிலிருந்து சீர்காழி வரை செல்லும் அரசு பேருந்தில் டிக்கெட் ரூ.20 என்று வசூல் செய்துள்ளனர்.  மயிலாடுதுறையில் நேற்று 1.30 மணிக்கு பேருந்தில் ஏறிய பயணி ஒருவர் 3 கி.மீ தூரம் வரை சென்ற பிறகு டிக்கெட் எடுக்கும்போது ரூ.13ஐ கொடுத்துள்ளார். ஆனால் அதற்கு பேருந்து நடத்துனர், இது சிறப்பு பேருந்து ரூ.20 கொடுங்கள் என்று கேட்டுள்ளார். இது சிறப்பு பேருந்து என்றோ இதில் கட்டணம் ரூ.20 என்று போர்டில் எழுதியிருந்தாலோ அல்லது அறிவித்திருந்தாலோ நாங்கள் ஏறியிருக்கமாட்டோம் என்று கேட்டதற்கு வேண்டுமென்றால் இங்கேயே இறங்கிக்கொள்ளுங்கள் என்று பேருந்தை நிறுத்த நடத்துனர் விசில் அடித்துள்ளார்.

பேருந்தே நிற்காத இடத்தில் என்னை இறக்கிவிட்டால் என்ன செய்வது என்று கேட்டதற்கு, அதற்கு ஒழுங்குமரியாதையாக ரூ.20 கொடுத்து டிக்கெட் வாங்கிக்கொள் என்று கடுமையாக பேசியுள்ளார். வேறு வழியின்றி அந்த பயணி ரூ.20 கொடுத்து டிக்கெட் எடுத்துக்கொண்டு சீர்காழி புதியபேருந்து நிலையத்தில் இறங்கிக் கொண்டார்.அந்த பேருந்து மீண்டும் அங்கிருந்து மயிலாடுதுறைக்குப் புறப்பட்டு சென்றது. அதே போன்று சீர்காழியிலிருந்து மயிலாடுதுறைக்கு ரூ.20 என்று டிக்கெட் போட்டுச் சென்றனர். எந்த விசேஷமும் இல்லை, லட்சக்கணக்கான  நகரத்தார் இனமக்கள் நடைபயணமாக காரைக்குயிலிருந்து வைத்தீஸ்வரன்கோயிலை சென்றடைந்து புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் தங்கள் ஊர்களுக்கு ரயில் மற்றும் பேருந்து மூலம் செல்வார்கள். அவர்கள் புதன்கிழமைதான் செல்வார்கள். அன்று சிறப்பு பேருந்து விட்டாலும் நியாயம்உண்டு. இதுவரை நடைபயணம் செல்பவர்களுக்காக சிறப்பு பேருந்து விட்டு அதில் வழக்கமாக செல்லும் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூல் செய்வது கண்டிக்கத்தக்கது. சிறப்பு பேருந்து என்று பேருந்தில் எழுதவேண்டும், கூடுதல் கட்டணத்தையும் அதில் குறிக்கவேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED ஆட்டம் பாட்டத்துடன் நடந்த அனல் பறக்கும் பிரசாரம் ஓய்ந்தது