×

இலவச வீட்டுமனைகள் வழங்கும் விவகாரம் கிராமமக்கள் திடீர் சாலை மறியல்:

பள்ளிப்பட்டு, ஏப்.23: தமிழக அரசு வழங்கிய இலவச வீட்டுமனைகளை ஒரு பிரிவினருக்கு அளவீடு செய்து கொடுக்க ஊர்மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் செய்ததால் மோதல் ஏற்படும் சூழல் உள்ளது.. இதனால் ஏற்படும் பதற்றத்தை தணிக்க போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. ஆர்.கே.பேட்டை அருகே ராஜாநகரம் மோட்டூர் கிராமத்தில் ஏராளமானவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களது வீடுகளுக்கு அருகில்  மற்றொரு பிரிவைச் சேர்ந்த 100 குடும்பங்களுக்கு வீடு கட்டிக்கொள்ள அதே பகுதியில் தமிழக அரசின் சார்பில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இலவச வீட்டு மனைகள் வழங்கப்பட்டது. இருப்பினும், அரசு வழங்கிய காலி வீட்டுமனைகள் அளவீடு செய்து பயனாளிகளுக்கு  ஒப்படைக்க கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால்,  நில அளவீடு செய்யும் பணி பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது.  சில மாதங்களுக்கு முன்பு பயனாளிகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட்டனர்.

இதனை அடுத்து  வீட்டுமனை பெற்றுள்ள பயனாளிகளுக்கு நில அளவு செய்து தர வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். கிராமத்தில் வீடுகளுக்கு அருகில் மற்றொரு பிரிவினர் வீடுகள் கட்டிக்கொண்டால், மோதல் சம்பவங்கள் நடக்க வாய்ப்பிருப்பதாக கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில்  நேற்று ராஜாநகரம் கிராமத்தில் ஒரு பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள வீட்டு மனைகள் அளவீடு செய்து வழங்க வருவாய்த்துறையினர் சென்றனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கிராமமக்கள் 500க்கும் மேற்பட்டோர்  திரண்டு  சோளிங்கர்- பள்ளிப்பட்டு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 9 மணி அளவில்  தொடங்கிய போராட்டம் 12 மணிவரை நீடித்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் திருத்தணி டி.எஸ்.பி சேகர் தலைமையில், ஆர்.கே.பேட்டை, பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய காவல் நிலையங்களிலிருந்து 50க்கும் மேற்பட்ட போலீசார் வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோட்டாட்சியர் பவணந்தி தலைமையில் வருவாய்த்துற மற்றும் காவல் துறையினர் பங்கேற்றனர். கிராமமக்களின் சார்பில்,  எங்கள் சமுதாய மக்கள் அரசுக்கு வழங்கிய நிலத்தில் வேறு சமுதாய மக்கள் வீடு கட்டிக்கொள்ள அனுமதிக்க முடியாது. இந்த நிலத்தை ஊரில் வீடுகள் இன்றி அவதிப்பட்டு வரும் ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்று எழுத்துப் பூர்வமாக மனு வழங்கினர்.  அந்த மனு மீது 10 நாட்களில் முடிவு எட்டப்படும் என்று கோட்டாட்சியர் உறுதி அளித்தார். இதை ஏற்று மறியல் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

ராஜாநகரம் கிராமத்தில் இலவச வீட்டுமனைகள் அளவீடு செய்து பயனாளிகளுக்கு வழங்க ஊர் மக்கள் எதிர்ப்பு  போராட்டம் நடத்தினர். அதே நேரத்தில் தமிழக அரசு வழங்கிய இலவச வீட்டுமனைகள் பெற்ற பயனாளிகளுக்கு ஆதரவாக,  சமுதாய மக்கள் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்பு இருப்பதால், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னி உத்தரவின்பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Tags :
× RELATED அனைத்து நீர்த்தேக்கங்களிலும் இருப்பு...