×

மெட்ரோ ரயில் பாலத்தில் ஏறி குடிமகன் தற்கொலை மிரட்டல்

திருவொற்றியூர்,  ஏப். 23:  திருவொற்றியூர் தியாகராயபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (48), கூலித்தொழிலாளி. குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இந்நிலையில் நேற்று மதியம் 12 மணிக்கு சுங்கச்சாவடி அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்ற இவர், அங்கு இருந்தவர்களிடம், ‘‘என்னிடம் பணம் இல்லை. மது வாங்கி கொடுங்கள்,’’ என்று கேட்டுள்ளார். ஆனால், யாரும் அவருக்கு மது வாங்கி தரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த செல்வம், பகல் 1.30 மணிக்கு அதே பகுதியில் மெட்ரோ ரயில் பணி நடைபெறும் இடத்திற்கு வந்தார்.திடீரென அங்கிருந்த ஏணியில் ஏறி 30 அடி உயர மெட்ரோ ரயில் மேம்பாலத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டு, ‘‘எனக்கு குடிக்க மது வாங்கி தரவேண்டும். இல்லை என்றால் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன்,’’ என்று கூறி மிரட்டியபடி கால்களை கீழே தொங்க விட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

இதுகுறித்து மெட்ரோ ரயில் ஊழியர்கள் திருவொற்றியூர் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்வத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, செல்வம் தனக்கு குடிக்க மது வாங்கி கொடுத்ததால்தான் கீழே இறங்கி வருவேன் என்று போலீசாரிடம் கூறினார். உடனே போலீசார் மது வாங்கி தருகிறோம், கீழே இறங்கி வா என்று கூறினர். ஆனால் மது பாட்டிலை வாங்கி மேலே தன்னிடம் கொண்டு கொடுத்தால்தான் கீழே இறங்குவேன் என்று அவர் கூறினார்.இதையடுத்து திருவொற்றியூர் தீயணைப்பு படை வீரர்கள் செல்வத்திற்கு தெரியாமல் மெட்ரோ ரயில் மேம்பாலத்தில் பின்புறமாக ஏறிச் சென்று அவரை பிடித்து பத்திரமாக கீழே இறக்கினர். பின்னர் போலீசார் செல்வத்தை போலீஸ் நிலையம் அழைத்து சென்று எச்சரிக்கை செய்து அவரது உறவினரிடம் ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : citizen ,rail bridge ,
× RELATED தேசத்தின் முதல் குடிமகவான குடியரசு...