×

சார்ஜாவில் இருந்து கடத்தி வந்த ₹16 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை, ஏப்.23: சார்ஜாவில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தின் சீட்டுக்கு அடியில் லைப் ஜாக்கெட்டிற்குள் மறைத்து கடத்தப்பட்ட ₹16 லட்சம் மதிப்புடைய 4 தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா விமானம் நேற்று காலை 8 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த அனைத்து பயணிகளும் இறங்கிச் சென்று விட்டனர். மீண்டும் அந்த விமானம் உள்நாட்டு விமானமாக டெல்லிக்கு புறப்பட்டுச் செல்ல தயாரானது. இதையடுத்து, ஏர் இந்தியா விமான நிலைய ஒப்பந்த ஊழியர்கள் அந்த விமானத்திற்குள் ஏறி சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு சீட்டுக்கு கீழே கயிறால் கட்டப்பட்ட பார்சல் ஒன்று இருந்தது. அந்த பார்சலை ஊழியர்கள் பிரித்து பார்த்தனர்.


விமானத்தில் பயணிகளுக்கு அவசர காலத்தில் உபயோகிப்பதற்காக கொடுக்கப்படும் லைப் ஜாக்கெட் ஒன்று இருந்தது. இதுபற்றி விமான நிலைய மேலாளருக்கு தகவல் கொடுத்தனர். அவர், அதிகாரிகளுடன் வந்து அந்த பார்சலை பிரித்து பார்த்தார். அதனுள் 4 தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு பிடித்தனர். அதன் எடை 500 கிராம். இதன் சர்வதேச மதிப்பு ₹16 லட்சம். இது சார்ஜாவில் இருந்த கடத்தப்பட்டுள்ளது. இதனை யாரோ ஒரு பயணி கடத்தி வந்துள்ளார். இந்த விமானம் உள் நாட்டு விமானமாக புறப்பட்டு டெல்லி சென்ற பிறகு அதனை வெளியில் எடுக்க திட்டமிட்டிருக்கலாம் என அதிகாரிகள் கருதினர். இதனை அடுத்து அந்த தங்க கட்டிகளை ஏர் இந்தியா அதிகாரிகள் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இது பற்றி தங்கம் கடத்தி வந்த நபர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Sharjah ,
× RELATED கனமழை காரணமாக துபாய், ஷார்ஜா சாலைகளில் வெள்ளப்பெருக்கு!