×

சாலையில் ஆறாக ஓடிய தண்ணீர்; மக்கள் மகிழ்ச்சி காஞ்சிபுரத்தில் சூறைக்காற்றுடன் திடீர் ஆலங்கட்டி மழை

சென்னை, ஏப்.23: காஞ்சிபுரம் பகுதியில் சூறைக்காற்றுடன் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது. இதையொட்டி, சாலையில் தண்ணீர் ஆறாக ஓடியது. கோடையின் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். காஞ்சிபுரத்தில் நேற்று காலை முதல் கோடை வெயில் கொளுத்தியது. திடீரென மதியம் 2 மணியளவில் கருமேகங்கள் சூழ்ந்து, சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. அப்போது திடீரென இடி, மின்னலுடன் சூறை காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால், காஞ்சிபுரம் மக்களுக்கு ஒருபுறம் சந்தோஷத்தை ஏற்படுத்தினாலும், ஒரு பக்கத்தில் பயத்தையும் ஏற்படுத்தியது. திடீரென சூறைக்காற்று வீசி இடி, மின்னலுடன் மழை பெய்ததால், பொதுமக்கள் கடும் அச்சமடைந்தனர். ெதாடர்ந்து, அரை மணிநேரம் மிதமான மழை பெய்தது. இதையொட்டி காஞ்சிபுரம் ரங்கசாமி குளம், காந்திரோடு, இரட்டை மண்டபம், மூங்கில் மண்டபம், கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலை, கருக்கினில் அமர்ந்தவள் கோயில் தெரு உள்பட பல பகுதிகளில் சாலைகளில் மழைநீர் ஆறாக ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். குறிப்பாக பைக்கில் சென்றவர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.

சூறைக்காற்றுடன் பெய்த மழையால் கலெக்டர் அலுவலகம், மூங்கில் மண்டபம் போன்ற பகுதிகளில் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. திடீர் மழையால் மூங்கில் மண்டபம் பகுதி, காமராஜர் வீதி, காந்தி ரோடு, கீரை மண்டபம், மேட்டு தெரு, விளக்கு அடி கோயில் தெரு ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதையடுத்து காஞ்சிபுரம் நகராட்சி ஊழியர்கள், சம்பவ இடங்களுக்கு சென்று, சாலைகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியிலும், சாலைகளில் முறிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த திடீர் மழையால் காஞ்சிபுரத்தின் முக்கிய வீதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. பின்னர், இரவு 8.30 மணிக்கு பிறகே மீண்டும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. காஞ்சிபுரம் சுற்றியுள்ள கிராமங்களில் மழை பெய்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : river ,road ,Kanchipuram ,
× RELATED மங்களகோம்பை செல்லும் சாலையில் புலியூத்து ஆற்றின் குறுக்கே பாலம் தேவை