×

திருவொற்றியூர் பகுதியில் 4வது நாளாக தீப்பற்றி எரியும் மாநகராட்சி குப்பை கிடங்கு

* கண் எரிச்சல், மூச்சுத் திணறலால் மக்கள் அவதி
* தீயை அணைப்பதில் அதிகாரிகள் சுணக்கம்

திருவொற்றியூர், ஏப்.23: திருவொற்றியூரில் மாநகராட்சி குப்பை கிடங்கு 4வது நாளாக தீப்பிடித்து எரிவதால் பொதுமக்கள் கண் எரிச்சல், மூச்சுத் திணறலால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருவொற்றியூர் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து தினசரி சேகரிக்கப்படும் குப்பைகள் லாரிகள் மூலம் கார்கில் நகர் அருகே உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது.
மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ள இந்த குப்பை கிடங்கில், கடந்த 19ம் தேதி மதியம் தீவிபத்து ஏற்பட்டது. காற்றில் தீ மளமளவென பரவி எரிந்தது. இதனால், அந்த பகுதி முழுவதும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது.

இதனால் அந்த வழியாக வாகனத்தில் சென்றவர்களும், குடியிருப்புவாசிகளுக்கும் கண் எரிச்சல், மூச்சுத் திணறல் போன்ற உபாதைகள் ஏற்பட்டது.
இதையடுத்து தீயணைப்பு துறையினர் குப்பைகளில் பற்றிய தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் பல ஆயிரம் டன் குப்பைகள் தீப்பிடித்து எரிவதால், அவற்றை எளிதில் அணைக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து 4வது நாளாக நேற்றும் குப்பை எரிந்து புகை மூட்டம் ஏற்பட்டது.குப்பைகளை அணைக்க குடிநீர் வழங்கல் வாரியம் தண்ணீர் கொடுக்காததாலும் குப்பைகள் பற்றிய தீயை கட்டுப்படுத்த போதிய வசதிகளை திருவொற்றியூர் மண்டல அதிகாரிகள் செய்து தராததாலும், முழுமையாக தீயை அணைக்க முடியவில்லை என்று தீயணைப்பு துறையினர் குற்றம்சாட்டினர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘இந்த குப்பை கிடங்கிற்கு அருகாமையில் சிபிசிஎல் நிறுவனத்திற்கு செல்லக்கூடிய கச்சா எண்ணெய் குழாய்கள் உள்ளன. தற்போது குப்பையில் பற்றிய தீயால் அந்த குழாய்கள் பாதிப்பு ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
குப்பையில் ஏற்பட்ட தீயை அணைப்பதில் மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். எனவே பெரிய அளவில் விபத்து ஏற்படுவதை தடுக்க உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : lorry warehouse ,Thiruvottiyur ,area ,
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...