×

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் விளம்பர போர்டுகள், பதாகைகள் அகற்றம்: மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு எதிரொலி

செங்கல்பட்டு, ஏப் 23: மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவின் எதிரொலியாக, செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்த விளம்பர போர்டுகள், பதாகைகள் அகற்றப்பட்டன. தென்னக ரயில்வேயின் ரயில் நிலையத்துக்கு சொந்தமான சுவர், பிளாட்பாரம், டிக்கெட் கவுன்ட்டர் ஆகிய பகுதிகளில் தேவையற்ற சுவரொட்டிகள், விளம்பர போர்டுகள். பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதனால் ரயில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. அதை அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், பொது நல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற கிளை, தெற்கு ரயில்வே பொது மேலாளர் மற்றும் ரயில்வே போலீசாருக்கு  வரும் 21ம் தேதிக்குள் அனைத்து ரயில் நிலையங்களிலும் உள்ள விளம்பர பதாகைகள், போர்டுகள் சுவரில் எழுதப்பட்டுள்ள விளம்பரங்களை அகற்ற வேண்டும் உத்தரவிட்டது.
மேலும் ரயில்வே தொழிற்சங்கம் சார்பில் வைக்கப்படுள்ள பெயர் பலகைகளையும் அகற்ற வேண்டும். அவ்வாறு அகற்றிய பின் அதை உறுதிசெய்யும் வகையில் போட்டோ, வீடியோ ஆதாரங்களை 24ம் தேதி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியது.

இதையடுத்து, ரயில்வே பொது மேலாளர் அலுவலகத்தில் இருந்து தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதன்பேரில், செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்த அனைத்து விளம்பர பதாகைகள், போர்டுகள், சுவரொட்டிகள் ஆகியவற்றை, ரயில் நிலைய மேலாளர் தலைமையில் ரயில்வே பாதுகாப்பு போலீசார், ரயில்வே ஊழியர்கள் அகற்றினர்.அதேபோல், ரயில்வே தொழிற்சங்க அலுவலகங்களில் வைக்கப்பட்டிருந்த சங்க போர்டுகளை அகற்றும் போது சங்க நிர்வாகிகளுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், சிறிது நேரத்தில் பேச்சுவர்த்தை மூலம் சமாதானம் அடைந்தனர். தொடர்ந்து, ரயில் நிலையம் செல்லும் வழி, ரயில்வே குடியிருப்பு, டூவீலர் பார்க்கிங் ஆகிய பகுதிகளில் இருந்த விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டன. இதனால் செங்கல்பட்டு ரயில் நிலையம் அமைந்துள்ள பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Branch ,Madurai High Court ,railway station ,Chengalpattu ,
× RELATED தமிழ்நாட்டில் எந்த கிராமத்தில் மண்...