×

நந்திவரம் - கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் விதிமுறைகளை மீறி கட்டப்படும் தனியார் கட்டிடங்கள்: பேரூராட்சிகளின் இயக்குநர் ஆய்வு செய்ய வலியுறுத்தல்

கூடுவாஞ்சேரி, ஏப். 23:நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் பிளான் அப்ரூவல் பெறாமல் விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டிடங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனை பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருப்பதால், பேரூராட்சிகளின் இயக்குநர் நேரில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சி, சென்னைக்கு அருகில் உள்ளதால், வளர்ந்து வரும் நகரமாக மாறி வருகிறது. இந்த பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

இந்த பேரூராட்சியில் பிளான் அப்ரூவல் பெறாமல், விதிமுறைகளை மீறி கட்டப்படும் தனியார் கட்டிடங்கள், நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன. இதனை பேரூராட்சி அதிகாரிகள், கண்டு கொள்ளாமல் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் இதனை, பேரூராட்சிகளின் இயக்குநர் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கூடுவாஞ்சேரி - நெல்லிக்குப்பம் சாலை மற்றும் நீர்வரத்து கால்வாய், ஏரி, குளம், குட்டை உள்பட பல அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து பலர் வீடுகள், கடைகள் உட்பட பல்வேறு கட்டிடங்கள் கட்டி வருகின்றனர்.மேலும், பட்டா நிலங்களில் குடியிருப்பவர்கள் சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகத்திடம் பிளான் அப்ரூவல் பெறாமல், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டுகின்றனர்.

அதே நேரத்தில், அருகில் உள்ள புறம்போக்கு நிலங்களிலும் சேர்த்து கட்டிடங்கள் கட்டுகின்றனர். இதனால், பல இடங்களில் அரசு புறம்போக்கு நிலங்கள் காணாமல் போய்விட்டன. பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் உள்ள 40 அடி சாலை, மாநில ஊரக நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான கூடுவாஞ்சேரி - நெல்லிக்குப்பம் சாலை ஆகியவற்றை ஆக்கிரமித்து, பலர் அரசு உயரதிகாரிகள், அரசியல் பிரமுகர்களின் பெயரை சொல்லி கட்டிடங்கள் கட்டுகின்றனர்.

இதுபற்றி சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் கூறியும் கண்டு கொள்ளவில்லை. சம்பந்தப்பட்ட பேரூராட்சி செயல் அலுவலர், விதிகளை மீறி கட்டும் கட்டிடங்களை கண்டு கொள்ளவில்லை. கடந்த மாதம் பேரூராட்சி அலுவலகத்தில்  பிளான் அப்ரூவல் பெறுவதற்கு செயல் அலுவலரின் பெண் உதவியாளர், லஞ்சம்  வாங்கியதாக கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  எனவே, இதுகுறித்து பேரூராட்சிகளின் இயக்குநர் நேரில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Nandhiyaram - Private Buildings ,Panchayats ,Guduvancheri Panchayat ,
× RELATED மதுரை மக்களின் பொழுதுபோக்கிற்காக ரூ.50...