×

ஆலந்தூர் மண்டலத்தில் பொதுமக்களுக்கான குடிநீர் ஓட்டல்களுக்கு விற்பனை: பொதுமக்கள் குற்றச்சாட்டு

ஆலந்தூர்: ஆலந்தூர் மண்டலத்தில்  பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய குடிநீரை  லாரிகளில் கொண்டு வருபவர்கள், சட்ட விரோதமாக கடைகளுக்கும், ஓட்டல்களுக்கும்  விற்பனை செய்து விடுவதால், குடிநீர் இன்றி தவித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். ஆலந்தூர் 12வது மண்டலம் 160வது வார்டுக்கு உட்பட்ட மடுவின்கரை மார்கோ தெரு, ஜேம்ஸ் தெரு, பருத்திவாக்கம் தெரு, சுப்பிரமணியசாமி கோயில் தெரு போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வாரியம் சார்பில், சரிவர குடிநீர் வழங்கப்படுவதில்லை என கூறப்படுகிறது.

பொது குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீரும் 5 குடங்களுக்கு மேல் வருவதில்லை. சில நேரங்களில் அதிலும் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘குடிநீர் வாரியம் மூலம் சின்டெக்ஸ் தொட்டி அமைக்கப்பட்டு ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. அதுவும் தற்போது 4 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய குடிநீரை லாரிகளில் கொண்டு வருபவர்கள், சட்ட விரோதமாக கடைகளுக்கும், ஓட்டல்களுக்கும் விற்பனை செய்து விடுகின்றனர். இதனால், குடிநீர் கிடைக்காமல் தவித்து வருகிறோம். குடிநீர் அவசியம் என்பதால் வேறு வழியின்றி தனியாரிடம் இருந்து ஆயிரம் லிட்டர் தண்ணீரை ரூ.500, ரூ.600 விலைகொடுத்து வாங்கும் நிலை உள்ளது. இந்த பகுதிகளில் உள்ளவர்கள் முறையாக குடிநீர் வரி செலுத்தியபோதும் குடிநீரை தடையின்றி பொதுமக்களுக்கு வழங்காமல் வியாபார நோக்கோடு அதிகாரிகள் செயல்படுகின்றனர்.

தினந்தோறும் தண்ணீர் வரும் என்று எண்ணி குடங்களை வரிசையாக வைத்து மணிக்கணக்கில் காத்து கிடந்தும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. குழாய் மூலம் குடிநீர் வழங்காவிட்டாலும், சின்டெக்ஸ் தொட்டியிலாவது தினந்தோறும் குடிநீர் வழங்க வேண்டும். இதே நிலை நீடித்தால் மெட்ரோ குடிநீர் வாரியத்தை கண்டித்து விரைவில், மறியல் போராட்டம் நடத்துவோம்,’’ என்றனர்.

Tags : drinking booths ,Alandur Zone: Public Accused ,
× RELATED ஆலந்தூர் மண்டலத்தில் பொதுமக்களுக்கான...