ஓட்டப்பிடாரம் தொகுதி அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜ் பதவி நீக்கப்பட்டவருக்கு மீண்டும் வாய்ப்பு

ஓட்டப்பிடாரம், ஏப்.23: ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளராக சுந்தர்ராஜ் போட்டியிடுவார் என அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.     கடந்த 2016ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஓட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர் சுந்தர்ராஜ். ெஜயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் இருந்து  டிடிவி. தினகரன் தலைமையிலான அணிக்கு சென்றதால் சபாநாயகரால் சுந்தர்ராஜ் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் இந்த தொகுதி தற்போது இடைத்தேர்தலை சந்திக்கிறது.   ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் சுந்தர்ராஜ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மீண்டும் சுந்தர்ராஜ்க்கு வாய்ப்பு கிட்டியுள்ளது. ஓட்டப்பிடாரம் அருகே உள்ள முப்புலிவெட்டியை சேர்ந்த சுந்தர்ராஜ் (52) பி.எஸ்.சி (மண்ணியல்) படித்துள்ளார். சரள் மண் குவாரி நடத்தி வந்த நிலையில் தற்போது முழுநேர அரசியல் பணி மட்டுமே இவரது தொழிலாக உள்ளது. அமமுகவில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளராகவும், மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளராகவும் உள்ளார். இவரது மனைவி சந்தனமாரி. தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவருக்கு பால நித்யசுந்தரி என்ற மகளும், கோபிநாத் என்ற மகனும் உள்ளனர்.  அதிமுகவில் இருந்தபோது இவர், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணைய நிர்வாகக்குழு உறுப்பினர், நெல்லை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க நிர்வாக குழு உறுப்பினர், மாவட்ட அண்ணா பொது தொழிற்சங்க துணைச் செயலாளர், ஓட்டப்பிடாரம் யூனியன் கவுன்சிலர் ஆகிய பதவிகளில் இருந்துள்ளார்.

Related Stories: