×

முறையாக கொடுக்கப்படாத 4வது பைப்லைன் திட்டம் அத்திமரப்பட்டியில் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்

ஸ்பிக்நகர், ஏப்.23: தூத்துக்குடி பகுதியில் 4வது பைப் லைன் திட்டம் முறையாக கொடுக்கப்படாததால் அத்திமரப்பட்டியில் சாலையில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது.
தூத்துக்குடி மாநகர பகுதி மக்களின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் 4வது பைப்லைன் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்திற்காக அத்திமரப்பட்டி, ஜெஎஸ்நகர், அபிராமிநகர், முத்தையாபுரம் பல்க் உள்ளிட்ட பகுதிகளில் மேல்நிலைகுடிநீர் நீர்த்தேக்க தொட்டிகள்அமைக்கப்பட்டன. இந்த குடிநீர் தொட்டிகளுக்கு ராட்சத குழாய்கள் மூலம் மருதூர் அணைக்கட்டு பகுதியில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டது. பின்னர் இங்கு இருந்து வீடுகளுக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக தெருக்களில் கருப்பு நிறத்திலான குழாயும் வீடுகளுக்கு ஊதா நிறத்திலான குழாயும் பதிக்கப்பட்டது. இந்த பணிகளும் நிறைவடைந்து 2வருடத்திற்கு மேலாகிவிட்டது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு சில இடங்களுக்கு மட்டும் குடிநீர் விநியோகம் துவங்கியது. அவ்வாறு தண்ணீர் விநியோகம் செய்யும் போது சுந்தர்நகர், முத்தையாபுரம், அத்திமரப்பட்டி விலக்கு, ஸ்பிக்நகர், அபிராமிநகர், கீதாநகர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டது. அவ்வாறு உடைப்பு ஏற்படுவதும் அந்த உடைப்பை சரி செய்வதுமாக இருந்ததால் ஒரு சில பகுதிகள் தவிர மற்ற பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

 கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக அத்திமரப்பட்டி பகுதியில் கொடுக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் முறையாக கொடுக்கப்படாமல் ஊதா நிறத்திலான குழாய்களை தெருவில் விட்டு சென்றனர். ஒரு சிலர் தாங்களாகவே குழாய்கள் வாங்கி அதனுடன் இணைத்து வீடுகளுக்கு பைப்லைனை கொண்டு சென்றனர். ஆனால் குழாய்கள் வாங்க முடியாதவர்கள் சாலையில் உள்ள பைப்லைனில் குடங்களை கொண்டு வந்து வீடுகளுக்கு தேவையான தண்ணீரை எடுத்து செல்கின்றனர்.அவ்வாறு தண்ணீர் எடுத்து முடித்தவுடன் பைப்பை அடைத்து வைப்பதற்கு எந்தவித கருவியும் வழங்கப்படாததால் தண்ணீர் அடைக்கப்படாமல் சாலையில் விடப்படுகிறது. அவ்வாறு விடப்படும் தண்ணீர் சாலை முழுவதும் தேங்கிநிற்கிறது. இதனால் அந்தபகுதியை சேர்ந்த மக்கள் தேங்கி கிடக்கும் தன்ணீரில் தத்தளித்தவாறு சென்று வருகிறார்கள். அதோடு கோடைநேரமான தற்போது பல இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நேரத்தில் இவ்வாறு தண்ணீர் வீணாக வெளியேறி வருவது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு இந்த விஷயத்தில் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...