ஏரல்-குரும்பூர் சாலைப்பணி பாதியில் நிறுத்தம் கிராம மக்கள் அவதி

ஏரல், ஏப். 23: ஏரலில் இருந்து குரும்பூர் செல்லும் மெயின் சாலை பணி பாதியில் நிறுத்தப்பட்டதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். ஏரலில் இருந்து குரும்பூர் செல்லும் முக்கிய சாலை 7 கி.மீ. தூரம் உள்ளது. இந்த சாலையானது குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருந்து வந்தது. இதனால் இந்த சாலை வழியாக குரும்பூர், காரவிளை, சேதுசுப்பிரமணியபுரம், சேதுக்குவாய்த்தான், ராஜபதி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து ஏரல் பள்ளிகளில் படித்து வரும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அவதிப்பட்டு வந்தனர். மேலும் இந்த சாலை வழியாக பிரசித்திபெற்ற ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் மற்றும் நாலூமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்திற்கும், வனதிருப்பதி கோயிலுக்கும் செல்லும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் அவதிப்பட்டு வந்தனர்.  தினமும் இவ்வழியாக ஏராளமான வாகனங்கள் தட்டுதடுமாறி சாலையில் ஊர்ந்து சென்று வந்தன. எனவே ஏரல்-குரும்பூர் சாலையை சீரமைக்க கோரி பல்வேறு தரப்பட்ட மக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

 இதையடுத்து கடந்த ஆண்டு ஏரல்-குரும்பூர் சாலை புதியதாக அமைக்கப்பட்டது. இதனால் இப்பகுதி மக்கள், பள்ளி மாணவ, மாணவிகள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் இந்த தார்ரோடு குரும்பூரில் இருந்து ஏரல் வரை முழுவதும் போடப்படாமல் குரும்பூரில் இருந்து சேதுசுப்பிரமணியபுரம் வரை மட்டும் போடப்பட்டது. இதனால் இந்த ரோட்டில் சேதுசுப்பிரமணியபுரத்தில் இருந்து சேதுக்குவாய்த்தான் வழியாக ஏரல் வரை சுமார் 2 கி.மீ சாலை பணி கிடப்பில் போடப்பட்டது. மீதமுள்ள இந்த சாலையானது ஒரு மாதத்தில் அமைக்கப்படும் என மக்கள் நினைத்த நிலையில் ஒருவருடத்திற்கு மேல் ஆகியும் மீதமுள்ள இந்த சாலை போடப்படுவதற்கான அறிகுறி இல்லை. ஏற்கனவே குண்டும், குழியுமாக இந்த சாலை அரிப்பு ஏற்பட்டு இருந்த இடம் தெரியாமல் படுகுழியாக உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏரல்-குரும்பூர் ரோட்டில் கிடப்பில் போடப்பட்டுள்ள மீதமுள்ள சேதுசுப்பிரமணியபுரத்தில் இருந்து ஏரல் வரை தார்ரோட்டை உடனே அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: