நெல்லை-குலசேகரன்பட்டினம் வழித்தடத்தில் விடுமுறை நாட்களில் ஆப்சென்ட்டாகும் அரசு பஸ் அவதிக்குள்ளாகும் பயணிகள்

உடன்குடி, ஏப்.23: நெல்லையிலிருந்து குலசேகரன்பட்டினத்துக்கு இயக்கப்படும் அரசு பஸ் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஆப்சென்ட் ஆவதால் பஸ்களின்றி பயணிகள் அவதிப்படுகின்றனர்.நெல்லை அரசு போக்குவரத்து கழகம் ெநல்லை மண்டலம் தாமிரபரணி பணிமனையில் இருந்து தினமும் தடம் எண் ‘137 ஏ’ நெல்லையில் இருந்து குலசேகரன்பட்டினத்துக்கு இயக்கப்படுகிறது. இந்த பஸ் நெல்லை புதிய பஸ்நிலையத்தில் புறப்பட்டு குரும்பூர், நாலுமாவடி, பூச்சிக்காடு, காயாமொழி, பரமன்குறிச்சி, உடன்குடி வழியாக குலசேகரபட்டினத்துக்கு இயக்கப்பட்டு வருகிறது. இப்பகுதி பொதுமக்கள், தனியார், அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். மேலும் இந்த பஸ்சில் பயணிகள் கூட்டம் எப்போதும் அலைமோதும். ஆனால் வாரத்தில் 5 நாட்கள் முறையாக இயக்கப்பட்டு வந்தாலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு பஸ் இயக்கப்படாமல் ஆப்சென்ட் ஆகிவிடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் நெல்லையில் இருந்து குலசேகரன்பட்டினம் மற்றும் வழித்தட பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே பயணிகளின் சிரமத்தை போக்கும் வகையில் முறையாக தினமும் ‘137 ஏ’ அரசு பஸ்சை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: