ஆம்பூர் கடனா நதிக்கரையில் படித்துறை கிராம மக்கள் வலியுறுத்தல்

கடையம், ஏப். 23:   தாமிரபரணியின் துணை நதியான கடனா நதி, மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் உற்பத்தியாகி ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி ஆகிய ஊர்களுக்கு மத்தியில் அம்பை - தென்காசி சாலையை கடந்து திருப்புடைமருதூரில் தாமிரபரணியுடன் சங்கமிக்கிறது. இந்நதி மூலம் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, கடையம் மற்றும் பாப்பாக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட பல கிராமங்கள் குடிநீர் வசதி பெறுகின்றன. இந்நிலையில் கடந்தாண்டு தாமிரபரணி புஷ்கர விழா கொண்டாடியபோது அக்.21ல் கடனாநதி ஆற்றிலும் ஆரத்தி வழிபாடு நடைபெற்றது. ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள், கடனா நதியில் நீராடி வந்த நிலையில் ஆரத்தி வழிபாட்டிற்கு பின் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் குடும்பம், குடும்பமாக வாகனங்களில் வந்து குளித்துச் செல்கின்றனர். எனவே கடனாநதி ஆற்றில் ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி ஊர்களுக்கு இடையே உள்ள தரைப்பாலம் பகுதியில் பொதுமக்கள் குளிப்பதற்கு வசதியாக படித்துறை அமைத்துத் தர வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.  

இதுதொடர்பாக நீர்ப்பாசனக் கமிட்டித் தலைவர் கசமுத்து தலைமையில் கீழ ஆம்பூர் பொதுமக்கள், கடையம் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகையாவிடம் கோரிக்கை மனு அளித்து உள்ளனர். இதுகுறித்து நீர்ப்பாசனக் கமிட்டித் தலைவர் கசமுத்து கூறும்போது, தாமிரபரணியைப் போல் அதன் கிளை நதியான கடனாநதியும் வற்றாத நதியாகும். இந்த நதியில் ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் பல்வேறு ஊர்களில் இருந்தும் பொதுமக்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் வந்து குளித்துச் செல்கின்றனர்.  எனவே கடனாநதி தரைப்பாலம் பகுதியில் பொதுமக்கள் குளிப்பதற்கு வசதியாக படித்துறை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Related Stories: