குப்பை நகரமான பாவூர்சத்திரம்

பாவூர்சத்திரம், ஏப். 23: குப்பை கூளமாக பாவூர்சத்திரம் காட்சியளிப்பதால் சுகாதார சீர்கேட்டால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.நெல்லை - தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது பாவூர்சத்திரம். வளர்ந்து வரும் நகரமான இப்பகுதி, இரு ஊராட்சிகளில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலையை மைய கோடாக நிர்ணயித்து சாலைக்கு தென்புறம் கல்லூரணி ஊராட்சி என்றும், வடபகுதி குலசேகரப்பட்டி ஊராட்சி என்றும் பாவூர்சத்திரம் அமைந்துள்ளது.இரு ஊராட்சிகளில் இந்நகர் இருப்பதால், இங்கு தூய்மைப்பணிகள் முழுமையாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாவூர்சத்திரம் காமராஜர் நகர் கீழ் பகுதியில் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைந்திருந்தும், அதிகாரிகள் இதனை கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் புகார் கூறப்படுகிறது.

குறிப்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருபுற நுழைவு வாயிலிலும் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. இந்த அலுவலகத்தில் ‘‘முழு சுகாதார இயக்கம்’’ என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதன் கீழும் குப்பைகள் கொட்டப்பட்டு கிடக்கிறது. இதில் கோழி, மீன் கழிவுகள் வீசப்படுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இவ்வழியாக செல்வோரும், ஒன்றிய அலுவலகத்துக்கு வருவோரும் முகம் சுழித்தபடியே செல்கின்றனர். இவ்வழியாக தினமும் அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர் என பல தரப்பினரும் சென்றாலும் கவனிப்பாரில்லை.இதேபோல் பாவூர்சத்திரம் காமராஜ்நகர் வென்னிமலை அடிவாரத்தின் மேல் பகுதியில் டிரான்ஸ்பார்மர் அருகே குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இந்த ரோட்டின் தென்பகுதியிலும் குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேடு நிலவுகிறது. முப்பிடாதி அம்மன் கோயில், பாவூர்சத்திரம் அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தை சுற்றியிலும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. அருகில் உள்ள கடைக்காரர்களும் கழிவுப்பொருட்களை தட்டிவிட்டு செல்கின்றனர். கீழப்பாவூர் ஒன்றிய சந்தை மேற்பகுதியிலும் குப்பைகள் குவிக்கப்பட்டு அவ்வவ்போது தீ வைத்து எரிக்கப்படுகிறது.

இதில் இருந்து கிளம்பும் புகையை சுவாசிப்பதால் பொதுமக்களுக்கு பல்வேறு சுவாச நோய்கள் ஏற்படுகின்றன. இதுகுறித்து பாவூர்சத்திரம் பகுதி மக்கள் கூறுகையில், பிரசித்தி பெற்ற காய்கனி சந்தை உள்ள நகரம் பாவூர்சத்திரம். இதனால் எப்போதும் வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் இருக்கும். ஆனால் கடந்த சில மாதங்களாக இந்நகர் முழுவதும் எங்கு பார்த்தாலும் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதுகுறித்து புகார் தெரிவித்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இதனால் குப்பை நகரமாக மாறியுள்ள பாவூர்சத்திரத்தில், எங்கும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. நாடு முழுவதும் சுத்தம், சுகாதாரத்தை பாதுகாக்க மத்திய அரசு, தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதற்காக பல ஆயிரம் கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிதியில் சிறிதளவு கூட எங்கள் பகுதிக்கு ஒதுக்கப்படவில்லையா? என்பதுதான் எங்களது முதல் கேள்வியாக உள்ளது. உள்ளாட்சி அமைப்பினர், சுத்தம் சுகாதாரத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பேரணிகள் நடத்துகின்றனர். ஆனால் அத்துடன் பணிகள் முடிந்து விட்டதாக எண்ணுகின்றனர்.உரிய நிதியை பெற்று துப்புரவு பணிகளை தீவிரப்படுத்தி சுகாதார சீர்கேட்டை தடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகமும் இவ்விஷயத்தில் கவனம் செலுத்தி கல்லூரணி, குலசேகரப்பட்டி ஊராட்சி மூலம் ஆங்காங்கே குப்பை தொட்டிகள் வைத்து தூய்மை பணிகள் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறினர்.

Related Stories: