×

குமரியில் மழை நீடிப்பு பேச்சிப்பாறை நீர் மட்டம் 2 அடி ஆனது

நாகர்கோவில், ஏப்.23 : குமரி மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன் விடிய, விடிய பல்வேறு இடங்களில் மழை பெய்ததால், ஓரளவு வெப்பம் தணிந்தது. நேற்றும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக குலசேகரம், திருவட்டார், திற்பரப்பு பகுதிகளில் மழை இருந்தது. பூதப்பாண்டி, அருமநல்லூர் பகுதிகளிலும் மழை பெய்தது. நாகர்கோவில் நகரில் நேற்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்தது. மதியத்துக்கு பின் மழைக்கான அறி குறி இருந்தது. லேசான சாரலுடன், குளிர்ந்த காற்றும் இருந்தது. பேச்சிப்பாறை உள்ளிட்ட அணை பகுதிகளிலும் மழை இருந்ததால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் அதிகரித்தது. ஏராளமான சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்தனர். நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 2 அடியாக இருந்தது. தொடர்ந்து 1 அடிக்கு கீழ் தண்ணீர் இருந்த நிலையில், நேற்று தான் பேச்சிப்பாறை நீர் மட்டம் 2 அடியாகி இருக்கிறது. பெருஞ்சாணி நீர்மட்டம் 20.45 அடியாக இருந்தது. சிற்றார்-1ல் 5.38 அடியும், சிற்றார்-2ல் 5.48 அடியும் நீர்மட்டம் உள்ளது. பொய்கையில் 10.10 அடியும், மாம்பழத்துறையாறு அணையில் 43.80 அடியும் நீர்மட்டம் உள்ளது. முக்கடல் அணை 2.45 அடியாக இருந்தது. குடிநீர் தேவைக்காக பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

 தற்போது விவசாயிகள் கன்னிப்பூ சாகுபடியில் தீவிரமாக உள்ளனர். எனவே மழை  தொடர்ந்து பெய்து அணைகளின் நீர் மட்டம் உயர்ந்தால் சாகுபடி பணிகளை வேகமாக மேற்கொள்ள முடியும் என விவசாயிகள் தெரிவித்தனர். இந்த முறை வழக்கத்தை விட அதிகமாக வெயில் வாட்டி வதைத்துள்ளது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் உக்கிரம் அதிகமாக இருந்ததால், மக்கள் அச்சத்தில் இருந்தனர். இந்த அச்சத்துக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில், கடந்த சில தினங்களாக மழை பெய்த வண்ணம் உள்ளது.நேற்று முன் தினம் மாலையில் பலத்த இடி மின்னல் இருந்தது. இதில் குழித்துறை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்த தென்னை மரம் தீ பிடித்து எரிந்தது. அந்த சமயத்தில் பலத்த மழை இருந்ததால் தீ கட்டுப்படுத்தப்பட்டது. மழை இல்லாமல் இருந்திருந்தால் தீயின் தாக்கம் அதிகமாக இருந்திருக்கும் என்று பணியாளர்கள் தெரிவித்தனர்.
நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக சிவலோகம் (சிற்றார் 2) பகுதியில் 27 மி.மீ. மழை பெய்து இருந்தது. சிற்றார் 1 பகுதியில் 21 மில்லி மீட்டரும், குழித்துறை பகுதியில் 23.2 மில்லி மீட்டரும், பேச்சிப்பாறை பகுதியில் 24.2 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. சுருளோடு பகுதியில் 13.4, களியல் 18.2, புத்தன் அணை 5, கன்னிமார் 1 மி.மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

Tags : Kumari ,river ,
× RELATED சித்திரை மாத பிறப்பையொட்டி குமரி...