×

சந்தேகப்படும் படியான நபர்கள் நடமாட்டம் உள்ளதா? கோணம் வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றி பைக்கில் போலீஸ் ரோந்து

நாகர்கோவில், ஏப். 23: கோணம் வாக்கு எண்ணிக்கை மைய ரோட்டில் சந்தேகப்படும் படியாக யாராவது வந்து செல்கிறார்களா? என்பதை கண்காணிக்க பைக்கில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகள் நாகர்கோவில் கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைத்து எண்ணப்பட உள்ளன. கடந்த 18ம் தேதி வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் அங்கு கொண்டு வரப்பட்டு, சட்டமன்ற தொகுதி வாரியாக தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டு உள்ளன. இந்த அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டு இருப்பதுடன், அறைகளுக்கு துணை ராணுவ பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. வாக்கு எண்ணிக்கை மையம் முழுவதும் மொத்தம் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இது தவிர 50 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதற்கான கட்டுப்பாட்டு அறையும் தனியாக அமைக்கப்பட்டு உள்ளது. 3 டிஎஸ்பிக்கள், 6 இன்ஸ்பெக்டர், 15 சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் துணை ராணுவ படையினர் என 261 பேர் இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.  வேட்பாளர்களின் முகவர்களும் தங்கி உள்ளனர். தேவைப்படும் பட்சத்தில் வேட்பாளர்களும் கட்டுப்பாட்டு அறைக்கு வந்து, வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள அறையை கேமரா மூலம் பார்த்துக் கொள்ளலாம். வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அத்துமீறி  நுழைபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை மையம் அருகே சந்தேகப்படும் படியான நபர்கள் நடமாட்டம் உள்ளதா? என்பதை கண்காணிக்கும் வகையில் பைக் ரோந்துக்கு எஸ்.பி. நாத் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார் கோணத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி ரோட்டில் இரு பக்கமும் 24 மணி நேரமும் தொடர்ந்து ரோந்து பணியில் இருப்பார்கள். பரந்து விரிந்து காணப்படும் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்துக்குள் தேவையின்றி யாராவது நுழைய முயல்கிறார்களா? சந்தேகப்படும்படியான வாகனங்கள்  எதுவும் வாக்கு எண்ணிக்கை மையத்தின் அருகில் நிற்கிறதா? என்பதை பைக் ரோந்து போலீசார் கண்காணிப்பார்கள். வாக்கு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள சாலையில் தான் கலெக்டர் பங்களா உள்ளது. நீதிபதி, மாவட்ட வருவாய் அதிகாரி இல்லங்களும் அந்த பகுதியில் தான் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தடை செய்யப்பட்ட பகுதியாக இருப்பதால், அந்த பகுதியில் தேவையில்லாமல் வந்து செல்லும் நடவடிக்கைகளில் யாரும் ஈடுபட வேண்டாம் என போலீசார் கூறி உள்ளனர்.


Tags : Patrol police ,center ,
× RELATED சாத்தான்குளத்தில் காட்சிப்பொருளான பழைய அங்கன்வாடி மைய கட்டிடம்