×

பெண் உட்பட 3 பேர் பலி: 16 பேர் படுகாயம் காட்பாடி அருகே டூரிஸ்ட் வேன் - தனியார் பஸ் நேருக்குநேர் மோதல்

வேலூர், ஏப்.23: காட்பாடி அருகே சுற்றுலா வேனுடன் தனியார் பஸ் நேருக்குநேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த பெண் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 16 பேர் படுகாயம் அடைந்தனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி கிளித்தான்பட்டறை அடுத்த மேல்வடுகன்குட்டை வெங்கடேசபுரத்தை சேர்ந்த 19 பேர் ஆற்காட்டில் நடந்த சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வேனில் சென்றனர். நிகழ்ச்சி முடிந்து அனைவரும் மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். மாலை 3.15 மணியளவில் வேன் காட்பாடி கிளித்தான்பட்டறை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது குடியாத்தத்தில் இருந்து ஆற்காடு நோக்கி வந்த தனியார் பஸ் முன்னால் சென்ற ஆட்டோவை முந்தி சென்ற போது, வேன் மீது நேருக்குநேர் பயங்கரமாக மோதியது. இதில் வேனின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது. இதில் வேனில் வந்த அனைவரும் படுகாயத்துடன் மரண ஓலமிட்டனர். இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த காட்பாடி போலீசார், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்புப்பணிகளை மேற்கொண்டனர்.

இதில் கே.வி.குப்பத்தை சேர்ந்த வேன் டிரைவர் அசோக்குமார்(37), சென்னையை சேர்ந்த குமார்(55), இவரது உறவினர் பூஜா என்ற புவனேஸ்வரி (27) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 16 பேர் ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவலறிந்த கலெக்டர் ராமன், எஸ்பி பிரவேஷ்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டனர். படுகாயம் அடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். இதையடுத்து விபத்தில் சிக்கிய பஸ் மற்றும் டூரிஸ்ட் வேனை கிரேன் மூலம் மீட்டு அங்கிருந்து அகற்றி போக்குவரத்தை சீர்செய்தனர். இதுகுறித்து காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


Tags : bus accident ,Tourist van ,bus face collision ,
× RELATED குன்னூர் பேருந்து விபத்து...