கூடுதலாக 20 அதிவிரைவு படையினர் குவிப்பு வேலூர், ராணிப்பேட்டை வாக்கு எண்ணும் மையங்களுக்கு

வேலூர், ஏப்.23:வேலூர், ராணிப்பேட்டை வாக்கு எண்ணும் மையங்களின் பாதுகாப்பிற்கு கூடுதலாக 20 அதிவிரைவுப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.தமிழகம் மற்றும் புதுவையில் 39 மக்களவை தொகுதிகள் மற்றும் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 18ம்தேதி நடந்து முடிந்தது. வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் மக்களவைத் தொகுதி, சோளிங்கர் சட்டமன்ற ெதாகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் உள்ள மையத்திலும் ஆம்பூர், குடியாத்தம் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் வேலூர் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதற்காக இந்த இரண்டு இடங்களிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.வேலூர் எஸ்பி பிரவேஷ்குமார் தலைமையில், தந்தை பெரியார் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திற்கு டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் 3 ஷிப்ட்கள் அடிப்படையில் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் ராணிப்பேட்டையில் டிஎஸ்பி கலைசெல்வன் தலைமையில் போலீசார் பாதுகாப்புப்பணியை மேற்கொண்டு உள்ளனர்.

இந்நிலையில், மதுரையில் தேர்தல் அதிகாரி ஒருவர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு சென்று வந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்த அதிகாரி மற்றும் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதையடுத்து வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்பேரில் தமிழகம் முழுவதும் உள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு அதிவிரைவு படையினர் கூடுதல் பாதுகாப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வாக்கு பதிவு இயந்திரங்களுக்கு ஏற்கனவே துணை ராணுவம், மத்திய தொழிற்பாதுகாப்பு படை, ஆயுதப்படை, உள்ளூர் போலீசார் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இதனிடையே தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில் வேலூர், ராணிப்பேட்டை வாக்கு எண்ணும் மையங்களுக்கு கூடுதலாக தலா 20 அதிவிரைவுப் படையினர் நேற்று முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: