அதிகாரிகள் அலுவலகத்தை பயணிகள் முற்றுகை அரக்கோணத்தில் பரபரப்பு ரயில் தாமதத்தால் ஆத்திரம்

அரக்கோணம், ஏப்.23: அரக்கோணத்தில் ரயில் தாமதத்தை முன்கூட்டியே அறிவிக்காததால் ஆத்திரமடைந்த பயணிகள் நேற்று ரயில்வே அதிகாரிகள் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. வேலூர் மாவட்டம், சோளிங்கர் (பாணாவரம்) ரயில் நிலையம் அருகே நேற்று காலை 8.25 மணியளவில் வந்தது. அப்போது, எதிர்பாராதநிலையில் ஏசி பெட்டியில் கோளாறு ஏற்பட்டு மகேந்திரவாடி ரயில் நிலையம் அருகே ரயில் நிறுத்தப்பட்டது. தகவலறிந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வந்து ஏசி பெட்டியில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், அரக்கோணம் ரயில் நிலையத்தில் திருவனந்தபுரம் ரயிலுக்காக பயணிகள் பலர் காத்திருந்தனர். அப்போது, திருப்பதியில் இருந்து சென்னை செல்லும் கருடாத்திரி எக்ஸ்பிரஸ், மதுரையில் இருந்து டேராடூன் செல்லும் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் வந்து சென்றன. தொடர்ந்து, திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக தாமதமாக வரும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. ஆனால், குறித்த நேரத்தில் முறையான அறிவிப்பு இல்லாததால் பயணிகள், மற்ற ரயில்களை தவறிவிட்டனர். இதனால், ஆத்திரமடைந்த பயணிகள், ரயில் நிலைய அதிகாரிகள் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், இனி முறையான அறிவிப்புகள் தெரிவிக்கப்படும் என்றனர். இதையடுத்து பயணிகள் அனைவரும் கலைந்து சென்றனர். இந்நிலையில் காலை 9.25 மணியளவில் கோளாறு சரிசெய்யப்பட்டு திருவனந்தபுரம் ரயில் புறப்பட்டு சென்றது. இதனால், பயணிகள் சுமார் 1 மணிநேரம் கடும் அவதிக்குள்ளாகினர்.

Related Stories: