சப்-கலெக்டர் அலுவலகம் ஜப்தி முயற்சி ராணிப்பேட்டையில் பரபரப்பு பெல் நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தவருக்கு இழப்பீடு வழங்காததால்

ராணிப்பேட்டை, ஏப்.23: பெல் நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தவருக்கு இழப்பீடு வழங்காததால் ராணிப்பேட்டை சப்-கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்யவந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராணிப்பேட்டை அடுத்த லாலாப்பேட்டையை சேர்ந்தவர் ஆனந்தன். அதே பகுதியில் உள்ள இவருக்கு சொந்தமான 1.5 ஏக்கர் நிலத்தை பெல் நிறுவனத்திற்கு கடந்த 1981ம் ஆண்டு வருவாய்த்துறையினர் கையகப்படுத்தனர். இதற்கான தொகை ₹27 ஆயிரத்தை 3 மாதத்தில் வழங்குவதாக கூறினர். ஆனால், இந்த பணத்தை பெல் நிறுவனம் வழங்கவில்லை. இதனால், ஆனந்தன் கடந்த 1984ம் ஆண்டு வேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு 1991ம் ஆண்டு ராணிப்பேட்டை நீதிமன்றத்துக்கும், பின்னர், அங்கிருந்து நிலம் தொடர்பான வழக்கு விசாரிக்கும் அரக்கோணம் நீதிமன்றத்துக்கும் மாற்றப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தனுக்கு வட்டியுடன் சேர்த்து ₹1 லட்சத்து 31 ஆயிரத்து 677 வழங்க கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டார். ஆனாலும் பெல் நிறுவனம் பணம் வழங்கவில்லை. இதுகுறித்து ஆனந்தன் மேல்முறையீடு செய்தார்.இதையடுத்து ராணிப்பேட்டை சப்-கோர்ட்டு நீதிபதி ஜப்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனையடுத்து, நீதிமன்ற அமினா டிசில்வா, வழக்கறிஞர் வெங்கடேசன், மனுதாரர் ஆனந்தனுடன் நேற்று ஜப்தி நடவடிக்கைக்காக ராணிப்பேட்டை சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். தகவலறிந்த சப்-கலெக்டர் இளம்பகவத், அமினா மற்றும் ஆனந்தனிடம் பணம் வழங்குவதற்கு ஒரு மாதம் அவகாசம் கேட்டார். இதனால், அவர்கள் ஜப்தி நடவடிக்கையை கைவிட்டு அங்கிருந்து சென்றனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Related Stories: