×

மே மாதம் ஜமாபந்தி நடைபெறாது ஜூன் முதல் வாரத்தில் தொடங்க திட்டம் தேர்தல் நடத்தை விதிமுறையால்

திருவண்ணாமலை, ஏப்.23: இந்த ஆண்டுக்கான ஜமாபந்தி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக ஜூன் முதல் வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 18ம் தேதி நடந்தது. மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. எனவே, வாக்கு எண்ணிக்கை முடிந்து, வரை தேர்தல் நடத்தை விதிமுறைகளை தேர்தல் ஆணையம் விலக்கிக்கொள்ளும் வரை, அரசு நிகழ்ச்சிகள், குறைகேட்பு கூட்டங்கள் நடத்த தடை செய்யப்பட்டன.இந்நிலையில், வருவாய் கணக்கு தணிக்கை எனப்படும் ஜமாபந்தி ஆண்டுதோறும் மே மாதத்தில் நடைபெறுவது வழக்கம். அப்போது, வருவாய் கணக்குகளை கிராம நிர்வாக அலுவலர்கள் தாக்கல் செய்து, தணிக்கைக்கு உட்படுத்துவதும், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று உடனுக்குடன் தீர்வு காண்பதும் நடைபெறும். ஜமாபந்தியின் நிறைவாக அனைத்து தாலுகாக்களிலும் விவசாயிகள் மாநாடும் நடைபெறும்.தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் மே இறுதிவரை வரை நடைமுறையில் உள்ளதால், இந்த ஆண்டு திட்டமிட்டபடி மே மாதம் ஜமாபந்தி நடத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஜூன் முதல் வாரத்தில் தொடங்கி, தொடர்ந்து 25 நாட்களுக்கு அனைத்து தாலுகாக்களிலும் ஜமாபந்தி நடத்த மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.எனவே, நடப்பு பசலி ஆண்டுக்கான (வருவாய் ஆண்டு) கணக்கு பதிவேடுகளை பராமரித்து, ஜமாபந்திக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ளுமாறு கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்களுக்கு வருவாய்த்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags :
× RELATED திமுக ஒன்றிய செயலாளர், அதிமுக மாவட்ட...