×

சிறுவனின் சடலம் தோண்டியெடுத்து பிரேத பரிசோதனை கலெக்டர், எஸ்பி முன்னிலையில் நடந்தது கண்ணமங்கலம் அருகே ஜீவ சமாதியானதாக கூறப்பட்ட

கண்ணமங்கலம், ஏப்.23: கண்ணமங்கலம் அருகே ஜீவ சமாதியானதாக கூறப்பட்ட 16 வயது சிறுவனின் சடலம் நேற்று மதியம் தோண்டியெடுக்கப்பட்டு கலெக்டர், எஸ்பி முன்னிலையில் பிரேத பரிசோதனை நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுகா, கண்ணமங்கலம் அடுத்த படவேடு அருகே உள்ள ராமநாதபுரத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். பள்ளி ஆசிரியர். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு தனநாராயணன்(16) என்ற மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். தனநாராயணன் 10ம் வகுப்பு வரை படித்துள்ளான். ஆன்மிகவும், தியானம் மீது ஈடுபாடு கொண்ட சிறுவன், கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி தங்கள் விவசாய கிணற்றின் அருகில் அமர்ந்திருந்த போது திடீரென கிணற்றில் தவறி விழுந்தான். இதைபார்த்த சிறுவனின் தங்கைகள் சத்தம் போட்டனர். தகவல் அறிந்த சந்தவாசல் தீயணைப்பு வீரர்கள் வந்து தனநாராயணனை மீட்டனர். விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தனநாராயணனின் உடலை பரிசோதித்து போது சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த சாமியார் சிறுவனின் நாடியை பிடித்து பார்த்து, தனநாராயணன் யோகநிலையில் ஜீவசமாதியாகிவிட்டாக கூறினாராம். இதையடுத்து தனநாராயணன் சடலத்தை விவசாய நிலத்திலேயே உறைகள் வைத்து விபூதி நிரப்பப்பட்ட குழியில் அடக்கம் செய்தனர்.தகவல்அறிந்த சந்தவாசல் போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் சிறுவன் ஜீவசமாதி அடையவில்லை. வலிப்பு நோயால் கிணற்றில் தவறி விழுந்து இறந்தான் என்று சிலர் சர்ச்சையை கிளப்பினர். இதுகுறித்து திருவண்ணாமலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி விசாரணை நடத்தினார். இந்நிலையில் அவரது உத்தரவின் பேரில் நேற்று காலை 9 மணியளவில் எஸ்பி சிபி சக்கரவர்த்தி, போளூர் தாசில்தார் ஜெயவேல், ஆரணி டிஎஸ்பி செந்தில் முன்னிலையில் டாக்டர் கமலக்கண்ணன் தலைமையிலான குழுவினர் பிரேத பரிசோதனைக்கு தயாரான நிலையில், சிறுவனின் பெற்றோர், கலெக்டர் வந்த பிறகே பிரேத பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

இதையடுத்து மதியம் 12 மணியளவில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி அங்கு வந்தார். அவரிடம் சிறுவனின் பெற்றோர், ‘சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இதற்காக ஒப்புக் கொள்கிறோம்’ என்றனர். பின்னர் மதியம் 12 மணிக்கு தொடங்கிய பிரேத பரிசோதனை மாலை 3 மணிக்கு முடிந்தது. இதையடுத்து சிறுவனின் பெற்றோர் முன்னிலையில் மீண்டும் அதே இடத்தில் சடலம் அடக்கம் செய்யப்பட்டது.சம்பவம் குறித்து கலெக்டர் கூறுைகயில், `பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு சிறுவனின் மரணத்துக்கான காரணம் குறித்து தெரிவிக்கப்படும்’ என்றார்.அப்போது சிறுவனின் பெற்றோர், ‘தங்களிடம் ஒரு பத்திரிகையாளர் பணம் கேட்டு மிரட்டியதாகவும், அதுதொடர்பாக சந்தவாசல் போலீசில் சிறுவனின் தாத்தா குப்புசெட்டி புகார் அளித்துள்ளார். அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். அதற்கு கலெக்டர், `நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்'. ஜீவ சமாதி அடைந்ததாக கூறப்படும் சிறுவன் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போக்குவரத்து விதிகளை மீறியதாக 3 ஆயிரம் வழக்குகள் பதிவு * ₹7.24 லட்சம் அபராதம் வசூல் * 350 ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய பரிந்துரை


திருவண்ணாமலை, ஏப்.23: திருவண்ணாமலையில் கடந்த 3 மாதங்களில் மட்டும் போக்குவரத்து விதிகளை மீறியதாக 3 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் இருந்து ₹7.24 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. மேலும், 350 வாகன ஓட்டிகளின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனுவாசன் தலைமையிலான போலீசார் திருவண்ணாமலை நகரில் வாகன தணிக்கை நடத்தி வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை நடந்த சோதனையில் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியது, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது மற்றும் அதிகவேகம், ஒரே பைக்கில் 3 பேர் சென்றது, நோ எண்ட்ரியில் வந்தது, செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியது என போக்குவரத்து விதிகளை மீறியதாக மொத்தம் 3 ஆயிரத்து 674 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் இருந்து அபராத தொகையாக ₹7 லட்சத்து 24 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.

மேலும் இந்த சோதனையின்போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியவர்கள், ஓவர்ஸ்பீடு, சிக்னலில் நிற்காமல் சென்றது என போக்குவரத்து விதிகளை மீறிய 350 வாகன ஓட்டிகளின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து திருவண்ணாமலை நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனுவாசன் கூறுகையில், இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் ஹெல்மட் அணிந்துதான் வாகனம் ஓட்ட வேண்டும். செல்போன் பேசியபடி யாரும் பைக்கை ஓட்டக்கூடாது. சோதனையின்போது வாகனம் ஓட்டுபவர்கள் கண்டிப்பாக உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். மது அருந்திவிட்டு யாரும் வாகனம் ஓட்டக்கூடாது. போக்குவரத்து விதிகளை மீறுவது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags : SSP ,Kannamangalam ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளர், அதிமுக மாவட்ட...