×

தங்கத் தேர் மறுசீரமைப்பு பணி தொடங்கியது அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் ஆய்வு திருவண்ணாமலையில் கலசத்துடன் பீடம் உடைந்து விழுந்ததால்

திருவண்ணாமலை, ஏப்.23: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பவனி வந்தபோது திடீரென கலசத்துடன் பீடம் உடைந்து சேதமடைந்த தங்கத் தேர் சீரமைக்கும் பணி நடந்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தங்கத் தேர் பவனி கடந்த 2015ம் ஆண்டு நடந்த கும்பாபிஷேக திருப்பணி காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிலையில் நிறுத்தியிருந்ததால், தங்கத்தேர் பழுதாகி இருந்தது. எனவே, பக்தர் ஒருவர் அளித்த ₹3.50 லட்சம் நன்கொடை மூலம், தங்கத் தேர் சீரமைக்கப்பட்டு, கடந்த பிப்ரவரி 21ம் தேதி வெள்ளோட்டம் விடப்பட்டது.இந்நிலையில் நேற்று முன்தினம் பக்தர்கள் தங்கத்தேர் இழுந்துச் சென்றபோது, கோயில் மூன்றாம் பிரகாரத்தில் திடீரென தேரின் மேல் பகுதியில் பொருத்தியிருந்த கலசம் பீடத்துடன் உடைந்து விழுந்தது. அப்போது, தங்கத்தேருக்கு அருகே நின்றிருந்த மணிவண்ணன்(24) என்பவர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில், சேதமடைந்த தங்கத் தேர் சீரமைப்பு பணி நேற்று தொடங்கியது. அதையொட்டி, கோயில் இணை ஆணையர் ஞானசேகர், அறநிலையத்துறை நகை சரிபார்ப்பு அலுவலர் ஜான்சிராணி முன்னிலையில், அறநிலையத்துறை பொறியாளர்கள் மற்றும் ஸ்தபதிகள் ஆகியோர் சீரமைப்பு பணியை மேற்கொண்டனர்.தேர் மறுசீரமைப்பு செய்த போது, முறையாக அந்த பணிகள் நடைபெறவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. தங்கத்தேரின் பீடம் முறையாக தேர் நிலையுடன் பொருந்தியிருக்கவில்லை. எனவே, கேபிள் வயர் பட்டதும் தேர் பீடம் உடைந்து விழுந்ததும் தெரிந்தது.இந்நிலையில் தங்கத்தேரின் பீடம் சீரமைப்பு செய்து மீண்டும் பொருத்துவதற்கான பணிகள் முடிந்ததும், அதன் உறுதித்தன்மை குறித்து சான்று பெறப்பட்ட பிறகே மீண்டும் தங்கத் தேர் பவனிக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : co-commissioner ,Thiruvannamalai ,Annamalaiyar temple ,
× RELATED திருவண்ணாமலையில் பங்குனி மாத...