×

நான்குவழிச்சாலையோரம் தேங்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு பாதாளச் சாக்கடையுடன் இணைக்க கோரிக்கை

விருதுநகர், ஏப். 23: விருதுநகர் அருகே, சிவஞான ஊராட்சியில் நான்குவழிச்சாலையோரம் தேங்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த ஊராட்சியை விருதுநகர் பாதாளச் சாக்கடை திட்டத்துடன் இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.விருதுநகர் அருகே, சிவஞானபுரம் ஊராட்சியில் பெத்தனாட்சி நகர், லட்சுமி நகர், என்ஜிஓ காலணி ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை முறையாக கொண்டு செல்ல ஊராட்சி நிர்வாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், நான்குவழிச்சாலையோர ஓடையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
இந்நிலையில், சாலை போடும் பணியால், நான்குவழிச்சாலையோரம் இருந்த நீர்வரத்து ஓடைகள் அகலம் குறைந்துள்ளன. இதில், தேங்கி நிற்கும் கழிவுநீரில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி வருகிறது. இதனால், அருகே உள்ள குடியிருப்புவாசிகளுக்கு சுகதாரக்கேடு எற்பட்டுள்ளது. கழிவுநீர் துர்நாற்றத்தால் சர்வீஸ் ரோட்டில் செல்லும் வாகனஓட்டிகள் முகஞ்சுளிக்கின்றனர். எனவே, சிவஞானபுரம் ஊராட்சி பகுதி குடியிருப்புகளில் இருந்து வழிந்தோடும் கழிவுநீரை முறையாக வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவுநீர் செல்லும் ஓடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விருதுநகர் நகராட்சி பாதாளச்சாக்கடை திட்டத்தில் சிவஞானபுரம், ரோசல்பட்டி, பாவாலி ஊராட்சி கழிவுநீரை சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags :
× RELATED செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சிக்கு...