×

சொந்த வீடு இல்லாததால் அரசு நிலத்தில் குடியேறிய தொழிலாளர்கள்


மூணாறு, ஏப்.23:  மூணாறு அருகே சூரியநல்லி பகுதியில் வீடு இல்லாத தோட்ட தொழிலாளர்கள் வருவாய்த்துறையின் நிலங்களில் குடியேறி  போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.  மூணாறு அருகே சூரியநல்லி பகுதியில் ஏலக்காய் தோட்டம் மற்றும் தேயிலை தோட்டங்களில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களில் பலருக்கு குடியிருக்க வீடுகள் இல்லை. எஸ்டேட் வீடுகளில் இருக்கும் இவர்களை உடனடியாக வீட்டை காலி செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் துன்புறுத்துவதாக கூறப்படுகிறது. இதனால் வீடு இல்லாமல் தவிக்கும் தொழிலாளர்கள் நேற்று காலை வருவாய்த்துறைக்கு சொந்தமான சர்வை எண் 341ல் அமைந்துள்ள நிலத்தில் குடியேறி போராட்டம் நடத்தினர். தொழிலாளர்கள் தலா 3 சென்ட் வீதம் நிலத்தை கைப்பற்றி மரங்கள், செடிகளை வெட்டி குடில்கள் அமைத்துள்ளனர். இன்னும் ஒரு சில நாட்களில் மரங்கள் மூலம் வீடுகள் அமைத்து குடியேற போவதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

இதை அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றனர். அப்பொழுது தொழிலாளர்களுக்கும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியில் வருவாய்த்துறை அதிகாரிகள் திரும்பி சென்றனர். தொழிலாளர்கள் அங்கேயே தங்கி சமைத்து சாப்பிட்டு வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தொழிலாளர்கள் கூறுகையில், ‘‘பல வருடங்களாக குடியிருக்க வீடு இல்லாமல் குழந்தைகளுடன் மிகுந்த மனவேதனையுடன் வாழ்ந்து வருகிறோம். குடியிருக்க வீடு வேண்டும் என்று பல முறை உரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.  எனவே இந்த இடத்தில் குடில்கள் அமைத்து குடியேறியுள்ளோம். இன்னும் ஒரு சில நாட்களில் மரங்கள் மூலம் வீடுகள் அமைத்து குடியேற உள்ளோம். அதிகாரிகள் எங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். இல்லையென்றால் இந்த இடத்தைவிட்டு நகரமாட்டோம்’’ என தெரிவித்தனர்.  

Tags : immigrant workers ,home ,
× RELATED நக்சல், தீவிரவாதத்தை ஒழிக்க மோடிதான்...