×

நகராட்சி அலுவலகம் அருகே சாலையில் ஓடும் சாக்கடை கழிவுநீர் தொற்றுநோய் பரவும் அபாயம்

கம்பம், ஏப்.23:  கம்பம் நகராட்சி அலுவலகம் அருகே நடுரோட்டில் சாக்கடை ஆறாக ஓடுகிறது. இதனால் தொற்றுநோய்கள் பரவும் ஆபத்து நிலவி வருகிறது. கம்பம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. 1 லட்சத்தை தொடும் இந்நகராட்சியில் ஆண்டு வருமானம் அதிகம் வந்தும் நகரில் மேற்கொள்ளவேண்டிய சுகாதாரப்பணிகள் முடங்கிப்போய் கிடக்கின்றன. இதனை கண்டுகொள்ளாத நிலையில் தொற்று நோய்கள் பரவிடும் ஆபத்து உள்ளது. குறிப்பாக நகராட்சி அலுவலகத்தின் அருகே சாக்கடை ஆறாக ஓடியும் கண்டு கொள்ளாத அவலம் தொடர்கிறது. இங்குள்ள 32வது வார்டில் சாக்கடை கால்வாய் நடுரோட்டில் ஓடுகிறது. இதனை சரிசெய்ய வேண்டிய நகராட்சி அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர். சாக்கடை தண்ணீர் மிக மோசமாக ஓடுவதால் தொற்று நோய்கள் உண்டாகும் அவலம் உள்ளது.

நகராட்சி அதிகாரிகள் இதனை சரிசெய்யாமல் கண்டும்காணாமல் இருப்பது ஏனோ என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக நகராட்சியில் சுகாதாரத்துறை இயங்கி வருகிறது. இதன் அலுவலர்கள் யாரும் நகரில் என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக எங்கும் செல்வதில்லை. இதனால் நகராட்சிக்கு புகார்கள் வந்தாலும் காற்றில் தூங்குகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், நகராட்சியில் எந்த புகார்கள் சென்றாலும் அதிகாரிகள் நடவடிக்கை இல்லை. குறிப்பாக நகராட்சி அலுவலகத்தின் பக்கத்தில் அதிகமானஅளவில் சாக்கடை தண்ணீர் ஆறாக ஓடுகிறது. இதனால் சாலையில் மக்கள் நடந்து செல்ல முடியவில்லை. வாகனங்கள் கழிவுநீரை நடந்து செல்வோர் மீது இரைத்துவிட்டு செல்கின்றன. மேலும் தொற்றுநோய் பரவும் அபாயமும் நிலவுகிறது. இதனை சரிசெய்யவேண்டிய அதிகாரிகளோ நகரில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் உள்ளனர்.
எனவே கழிவுநீர் சாலையில் செல்வதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : road ,office ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி