×

தனியார் நிதி நிறுவனங்களின் பணம் மோசடி புகார்கள் அதிகரிப்பு

சிவகங்கை, ஏப்.23: சிவகங்கை மாவட்டத்தில் தனியார் நிதி நிறுவனங்களில் பணம் செலுத்திய நபர்கள் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக புகார் அளிப்பது அதிகரித்து வருகிறது.சிவகங்கை மாவட்டத்தில் போதிய தொழில் வளம் இல்லை. இதனால் பணத்தை முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறைவு. இதை பயன்படுத்தி தனியார் நிதி நிறுவனங்கள் ஆங்காங்கே அதிகப்படியானவை முளைத்து வருகின்றன. இதன் நம்பகத்தன்மை குறித்து அறியாமல் ஏராளமானோர் பணம் செலுத்தி பின்னர் ஏமாறுவது வாடிக்கையாகி வருகிறது. தனியார் நிதி நிறுவனங்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மகளிர் குழுக்களில் உள்ள மாவட்ட, ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் மன்றத்தில் உள்ள உறுப்பினர்களை நிதி நிறுவனத்தில் முகவராக நியமனம் செய்கின்றனர்.மகளிர் குழுக்களில் உள்ள உறுப்பினர் அடையாள அட்டை, ரேசன், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை பெறுகின்றனர். மகளிர் குழுவினரும் இது குறித்து கேள்வி கேட்பதில்லை. இவ்வாறு பெற்ற விண்ணங்களை வைத்து தனியார் நிதி நிறுவனங்கள் நடத்தும் சிட்பண்ட், சிறு சேமிப்பு, ஏலச்சீட்டு உள்ளிட்டவற்றில் மகளிர் மன்ற உறுப்பினர்களை சேர்க்கின்றனர். மகளிர் மன்றத்தை நிர்வகிக்கும் தலைமை பொறுப்பில் உள்ளவர்களே இதுபோல் செய்வதால் யாருக்கும் சந்தேகம் எழுவதில்லை. இவர்கள் மூலம் பொதுமக்களும் பணம்
கட்டுகின்றனர்.

கூடுதல் வட்டி, தவணை முறையில் பணம் கட்டினால் இடம், மரம் வளர்த்து குறிப்பிட்ட ஆண்டுக்கு பின் மரத்தை விற்று பணம் பெறுவது என பல்வேறு விதங்களில் நிதி நிறுவனங்கள் பணம் வசூல் செய்கின்றனர். இந்நிலையில் கட்ட வேண்டிய கால கட்டம் முழுவதும் பணம் செலுத்திய பின்னர், பணம் குறித்து கேட்கும்போதுதான் பிரச்னை தொடங்குகிறது. நிறுவன அலுவலகங்களுக்கு சென்றால் சில மாதம் பதில் தெரிவிப்பவர்கள் பின்னர் அலுவலகத்தை காலி செய்து விட்டு சென்று விடுகின்றனர். இதனால் பணம் கொடுத்தவர்கள், வசூல் செய்து கொடுத்தவர்கள் இருவருமே கடும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். இவ்வாறு தொடர்ந்து பல கோடி ரூபாய் மோசடிகள் நடந்து வருவது குறித்து சிவகங்கை எஸ்பி அலுவலகத்தில் ஏராளமான புகார்கள் அளிக்கப்படுகின்றன. சில ஆண்டுகளாக இதுபோன்ற மோசடி புகார்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால் இதுவரை பணத்தை கட்டி ஏமாந்தவர்களுக்கு பணம் கிடைக்கவில்லை. அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் கூறியதாவது: வசூல் செய்து கொடுப்பவர்களுக்கு குறிப்பிட்ட தொகைக்கு அதிகப்படியான கமிசன் தருவதாக கூறி அவர்களை வசூலில் ஈடுபடுத்துகின்றனர். கூடுதல் வட்டி மற்றும் இடம், பொருள் என அதிகப்படியான தொகைக்கு ஆசைப்பட்டு இதுபோல் பணம் கட்டி ஏமாறுகின்றனர். முன்பு தனியார் சீட்டு நடத்துகிறோம் என வசூல் செய்வதில் பல்வேறு பிரச்னைகள் இருந்தது. தற்போது மகளிர் மன்றங்கள் மூலம் ஆயிரக்கணக்கானோரை எளிதில் தொடர்பு கொள்ள முடிவதால் அவர்கள் பணி எளிமையாகிறது. இதுகுறித்து மகளிர் மன்ற பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

Tags : Institutions ,
× RELATED அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள FPI...